காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை எதிர்க்கும் உரிமை தமிழ்நாட்டிற்கு இல்லையா ? – டிடிவி தினகரன்!

கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தின் துணை முதலமைச்சர் டி கே சிவக்குமாரின் ஆணவமிக்க பேச்சு கடும் கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழகத்திற்கு உரிமை இல்லை எனவும், அணைக் கட்டுமான பணிக்கான திருத்தப்பட்ட விரிவான அறிக்கையை விரைவில் சமர்ப்பிப்போம் எனவும் கர்நாடக மாநில துணை முதல்வரும் நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் கூறியிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

காவிரி டெல்டா பகுதிகளைப் பாலைவனமாக்கி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடியோடு கேள்விக்குறியாக்கும் மேகதாது அணையைக் கட்டியேத் தீருவோம் என்பதில் தொடர்ந்து பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கும் கர்நாடக அரசும், அதன் துணை முதல்வரும் தற்போது அணைக்கான பூமி பூஜை வரை பேசியிருப்பது தமிழகத்தில் ஒட்டுமொத்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு அதனால் பயன்பெறும் மாநிலங்களின் அனுமதி தேவை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், தமிழகத்திற்கான உரிய நீரை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் பலமுறை அறிவுறுத்தியும் தான்தோன்றித் தனமாக நடந்து கொள்ளும் கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழ்நாட்டு விவசாயிகளின் உயிர்நாடியை முடக்குவதில் வேகம் காட்டுவது கடும் கண்டனத்திற்குரியது.

ஆட்சி அதிகாரத்திற்காகக் கடந்த ஆட்சியாளர்கள் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்திடம் தமிழகத்தின் உரிமைகளை அடகு வைத்திருந்தது போல தற்போது காங்கிரஸ் கட்சியின் தயவுடன் ஆட்சியமைத்திருக்கும் தவெக அரசும் அதன் முதலமைச்சரும் தன்னுடைய பதவியையும், ஆட்சி அதிகாரத்தையும் தக்க வைக்க மீண்டும் ஒருமுறை காவிரி விவகாரத்தில் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்து விடுவார்களோ என்ற சந்தேகமும் அச்சமும் தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எனவே, ஆட்சி அதிகாரத்தை விட மாநிலத்தின் உரிமையும், விவசாயிகளின் நலனுமே முக்கியம் என்பதை உணர்ந்து காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டி தமிழகத்தின் டெல்டா பகுதிகளைப் பாலைவனமாக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தின் முயற்சியை அரசியல் ரீதியிலும், சட்ட ரீதியிலும் ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்திட வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.