கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் நடைபெற்று வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீராங்கனை மனிஷா பன்வாலா தங்கப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். 29 வயதான மனிஷா, 59 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் ஏ. எலிசபெத் நெட்டேவை எதிர்கொண்டார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவிய நிலையில், இறுதியில் 8-6 என்ற புள்ளிகள் கணக்கில் மனிஷா வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
முதல் இந்தியப் பெண் என்ற பெருமை
59 கிலோ எடைப்பிரிவு ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறாத பிரிவாக இருந்தாலும், உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியப் பெண் ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல்முறை என்பதால் இந்தச் சாதனை முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த உலக சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய மகளிர் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. மற்றொரு புறம், நீலம் சிரோஹி (50 கிலோ), காஜல் தோசாக் (76 கிலோ) ஆகிய இருவரும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர். இந்த இரண்டு எடைப்பிரிவுகளும் ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறும் பிரிவுகளாகும்.
இதற்கு முன்பு 2021-ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அன்ஷு மாலிக் 57 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி வெள்ளிப் பதக்கம் வென்றதே இந்திய மகளிர் மல்யுத்த வீராங்கனையின் சிறந்த சாதனையாக இருந்தது. இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இரண்டு வெண்கலப் பதக்கங்களையும், அந்திம் பங்கால் இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளனர். ஆனால், உலக சாம்பியன் பட்டத்தை இதுவரை எந்த இந்தியப் பெண் வீராங்கனையும் வென்றதில்லை.
ஆடவர் பிரிவில் சுஷில் குமார் மட்டுமே உலக சாம்பியன்
ஆடவர் பிரீஸ்டைல் மல்யுத்தத்தைப் பொறுத்தவரை, இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுஷில் குமார் மட்டுமே இந்தியாவின் உலக சாம்பியன் பட்டம் வென்ற வீரராக உள்ளார். இவர் 2010-ம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 66 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார். 2018-ம் ஆண்டு பஜ்ரங் புனியாவும் இறுதிப்போட்டி வரை முன்னேறி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தோல்வி
சமீபத்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனைகள் எதிர்பார்த்த அளவுக்குச் சாதிக்கவில்லை. அந்தத் தொடரில் அந்திம் பங்கால் மட்டுமே 53 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். இந்நிலையில், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மனிஷா பெற்றுள்ள தங்கம் இந்திய மகளிர் அணிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் களமிறங்கிய மனிஷா, காலிறுதியில் ஜப்பானின் அகாரி புஜினாமியிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து, உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 59 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்க முடிவு செய்தார். அவரது இந்த முடிவு தற்போது தங்கப் பதக்கமாக மாறியுள்ளது.
இறுதிப்போட்டியில் அசத்தல் கம்பேக்
இறுதிப்போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற சுற்றுகளில் மனிஷா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதலில் உலக சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்ற லாரன்ஸ் பியூர்கார்டை வீழ்த்தினார். தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் மங்கோலியாவின் போலோர்டுயா குரேல்குவையும், கஜகஸ்தானின் அல்டின் ஷகாயேவாவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் பான் அமெரிக்க சாம்பியனான ஏ. எலிசபெத் நெட்டேவுடன் மோதியபோது, முதல் சுற்றின் முடிவில் மனிஷா 1-5 என்ற புள்ளிகள் கணக்கில் பின்தங்கியிருந்தார். இருப்பினும், மனம் தளராமல் தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், அடுத்தடுத்து புள்ளிகளைக் குவித்து போட்டியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இறுதியில் 8-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கத்தை வசப்படுத்தினார்.
யார் இந்த மனிஷா பன்வாலா?
ஹரியானா மாநிலம் ஜிந்த் பகுதியைச் சேர்ந்த மனிஷா, ஏற்கெனவே 57 கிலோ முதல் 65 கிலோ வரையிலான பல்வேறு எடைப்பிரிவுகளில் போட்டியிட்டு அனுபவம் பெற்றவர். இதுவரை மூன்று உலக சாம்பியன்ஷிப் தொடர்களில் பங்கேற்றுள்ள அவர், அந்த அனுபவத்தைப் பயன்படுத்தி தனது வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார். இந்திய மகளிர் மல்யுத்த வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதியுள்ள மனிஷா பன்வாலாவுக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.




