கேரளாவில் எஸ்.ஐ.ஆர் சரிபார்ப்புப் பணிகளுக்கான காலக்கெடுவை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

கேரளாவில் எஸ்.ஐ.ஆர் சரிபார்ப்புப் பணிகளுக்கான காலக்கெடுவை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கேரளாவில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளுக்கான காலக்கெடுவை நீட்டிக்க மறுத்த உச்சநீதிமன்றம், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கணக்கீட்டுப் படிவங்களைச் சமர்ப்பிக்க முடியாதவர்களின் விவரங்களை இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை தொடர்பான மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய் மால்யா பக்‌ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, எஸ்.ஐ.ஆர் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்து உள்ளதாகவும், எனவே அதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது

அதற்குப் பதிலளித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், வாக்காளர் பட்டியலில் யாரேனும் விடுபட்டிருப்பதை மனுதாரர்கள் கண்டறிந்தால், அவர்களது விவரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் முறையீடாக அளிக்கலாம் என்றும், அந்தக் கோரிக்கைகளை ஆணையம் பரிசீலிக்க நீதிமன்றம் அறிவுறுத்தும் என்றும் தெரிவித்தார்.

மேலும், வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ளவும், பெயர்களைச் சேர்க்கக் கோரவும் தொடர்ச்சியான நடைமுறை இருப்பதால், காலக்கெடுவைத் தனியாக நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து, குறித்த காலக்கெடுவுக்குள் கணக்கீட்டுப் படிவங்களைச் சமர்ப்பிக்க முடியாதவர்களின் விவரங்களை மனுதாரர்கள் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கலாம் என்றும், அந்த மனுக்களைப் பரிசீலித்து தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதற்கிடையே, வாக்காளர் பட்டியலில் பெருமளவில் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தத்தார் வாதிட்டார், மேலும், இதுதொடர்பாக எழுப்பப்பட்டுள்ள விவகாரங்களுக்கு விரிவான பதில் மனுவைத் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கோரினார்.

இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், எஸ்.ஐ.ஆர் பணிகள் ஏற்கெனவே பிப்ரவரி மாதத்திலேயே நிறைவடைந்துவிட்டதாகவும், மனுக்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விவகாரங்களுக்கு பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, மனுதாரர்கள் அளித்துள்ள குறிப்பில் இடம்பெற்றுள்ள விவகாரங்களுக்கும் பதிலளிக்கும் வகையில், பிரதான வழக்கில் எதிர்மனுவைத் தாக்கல் செய்ய இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு 4 வார கால அவகாசம் வழங்கி தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.