மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும்! – நாஞ்சில் சம்பத் கருத்து

ஒரு சொட்டு தண்ணீராக இருக்கும் மதிமுகவை, கடலாக இருக்கும் திமுகவுடன் இணைக்க வேண்டும் என்று திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். மதிமுகவை அதன் தாய்க் கழகமான திமுகவுடன் இணைக்க வேண்டும் என்று,…

ஒரு சொட்டு தண்ணீராக இருக்கும் மதிமுகவை, கடலாக இருக்கும் திமுகவுடன் இணைக்க வேண்டும் என்று திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

மதிமுகவை அதன் தாய்க் கழகமான திமுகவுடன் இணைக்க வேண்டும் என்று, அக்கட்சியின் அவைத்தலைவர் துரைசாமி, வைகோவிற்கு இன்று கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தன்னிச்சையாக எடுத்த நடவடிக்கைகளால் கட்சி பாதிக்கப்படுவது குறித்து அவருக்கு கடிதங்கள் எழுதியதாக குறிப்பிட்டுள்ள துரைசாமி, அந்த கடிதங்களுக்கு இதுவரை பதில் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அண்மைகால நடவடிக்கைகளால் மதிமுகவிற்கும், வைகோவிற்கும் மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாகவும், சந்தர்ப்பவாத அரசியலுக்கு வைகோவும் அப்பாற்பட்டவர் இல்லை என்பதை மதிமுக தொண்டர்கள் அறிந்துள்ளதாகவும் கூறியுள்ளார். ஒவ்வொரு வார்டிலும் மதிமுக உறுப்பினர்களாக புதுப்பித்து கொண்டவர்களையும், புதியதாக சேர்க்கப்பட்டவர்களின் பெயரையும், ஆதார் எண்ணையும் இணைத்து சங்கொலி பத்திரிக்கையில் வெளியிட வேண்டும் என்றும் துரைசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளாக வைகோவின் பேச்சை நம்பி மதிமுக உறுப்பினர்கள் வாழ்க்கையை இழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள துரைசாமி, மேலும் மேலும் அவர்கள் ஏமாற்றம் அடையாமல் இருக்க மதிமுகவை தாய்க் கழகமான திமுகவுடன் இணைத்துவிடுவது சமகால அரசியலுக்கு சிறந்தது என்று தனது கடித்ததில் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் 40 இடங்கள் தான் கொடுப்பார்கள் – ராகுல் காந்தி!

இதுகுறித்து நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்த மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, ”என்னுடைய கருத்தை தெரிவித்துள்ளேன். தலைமை தான் முடிவு செய்ய வேண்டும். கட்சி உள்விவகாரங்கள் தொடர்பாக 6 கடிதங்கள் எழுதி உள்ளேன். இது 7வது கடிதம்” என்று தெரிவித்தார்.

 

திருப்பூர் துரைசாமி வலியுறுத்திய திமுக – மதிமுக இணைப்பு குறித்து நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த, திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், “மதிமுகவில் சேர்ந்தவர்களை விட விலகியவர்களே அதிகம். மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என்று திருப்பூர் துரைசாமி தெரிவித்துள்ளது நல்ல ஆலோசனை. ஒரு சொட்டு தண்ணீராக இருக்கும் மதிமுகவை, கடலாக இருக்கும் திமுகவுடன் இணைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.