கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் 40 இடங்கள் தான் கொடுப்பார்கள் – ராகுல் காந்தி!

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் 40 இடங்கள் தான் கொடுப்பார்கள் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் 10-ஆம்…

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் 40 இடங்கள் தான் கொடுப்பார்கள் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் 10-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தற்போதைய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் பதவிக் காலம் மே 24-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கர்நாடகாவில் தீவிரமாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

ஆளும் பாஜகவுக்கும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வந்த கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  கர்நாடகாவின் கலபுரகி மாவட்டத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ராகுல்காந்தி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது கூட்டத்தில் பேசிய அவர், பாஜகவின் 40 சதவீத கமிஷன் விவகாரம் குறித்து விமர்சித்து பேசினார். பாஜகவுக்கு 40 என்ற எண் தான் மிகவும் பிடிக்கும் என்பதால் தேர்தலில் கர்நாடக மக்கள் 40 சீட் தான் கொடுப்பார்கள் என்று குறிப்பிட்டு பேசிய ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சி 150 இடங்களில் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்றும், காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது என்று தெரிவித்தார். சிறப்பு கல்வித்துறை கொள்கை வகுக்கப்பட்டு, கலபுரகி போன்ற மாவட்டங்களுக்கு ஐஐடி ஐஐஎம் போன்ற கல்வி நிலையங்கள் வருவதற்கு காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்கும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.