‘அதிமுக பெற்ற பிள்ளைக்கு திமுக பெயர் சூட்டுகிறது’ – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் இழிவுப்படுத்தினால் அமைச்சர் டிஆர்பி ராஜா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை காந்தி மியூசியம் வளாகத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் 200 மாற்றுத் திறனாளிகளுக்கு தலைக்கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அறங்காவலர் சண்முகசுந்தரம் ஆகியோர் பங்கேற்று மாற்றுத் திறனாளிகளுக்கு தலைக்கவசங்களை வழங்கினார்கள். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில்,

“அதிமுக ஆட்சியில் இருந்து தான் தமிழகத்தில் 39 இடங்களில் அகழாய்வு நடைபெற்று வருகிறது. கீழடி அகழாய்வு எனும் பிள்ளையை பெற்றது அதிமுக, அந்த பிள்ளைக்கு திமுக பெயர் சூட்டு விழா நடத்துகிறது. அதிமுக ஆட்சியில் கீழடி அகழாய்வுக்கு முக்கியத்துவம் அளித்தது எடப்பாடி பழனிச்சாமி. திமுக ஆட்சியில் நடைபெறும் பிரச்சனைகளை மடைமாற்றுவதற்க்காக மத்திய அரசு கீழடி அகழாய்வு குறித்து ஆதாரம் கேட்டதை பேசி வருகிறது.

கீழடி அகழாய்வை பொதுவாக பேசி விட முடியாது, அதற்கான ஆதாரங்களை கொடுக்க வேண்டும், ஆதாரம் இல்லாமல் கொடுக்கப்படும் அகழாய்வை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாது. அதிகாரம், ஆணவத்தின் உச்சத்தில் திமுக அமைச்சர் டிஆர்பி ராஜா செயல்படுகிறார். அமைச்சர் டிஆர்பி ராஜா செயல்பாடுகளை சட்ட ரீதியாக சந்திப்போம், அதிமுகவை ஒரு முறை விமர்சித்தால் நாங்கள் 100 முறை விமர்சிப்போம், எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் இழிவுப்படுத்தினால் அமைச்சர் டிஆர்பி ராஜா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும், அரசியல் களத்தில் எடப்பாடி பழனிச்சாமியை குறைத்து மதிப்பிட்டவர்கள் தோற்றுப் போயிருக்கிறார்கள்.

கீழடி அகழாய்வு குறித்து மத்திய அரசு விளக்கம் கேட்பது நடைமுறையில் உள்ளதே, அகழாய்வில் விளக்கம் கேட்பதும், கொடுப்பதும் நடைமுறையில் உள்ள ஒன்றாகும், அதனை திமுக வெட்ட வெளிச்சமாக்கி விளம்பரம்
தேடுகிறது, அதிமுக ஆட்சி காலத்தில் எங்களிடமும் விளக்கம் கேட்டு இருக்கிறார்கள், அப்போதைய செயலாளர் உதயசந்திரன் விளக்கங்களை கொடுத்து இருக்கிறார். மத்திய அரசு அகழாய்வில் விளக்கம் கேட்பதில் திமுக அரசு ஏன் குதிக்கிகிறது” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.