‘10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடம் கட்டாயம் இல்லை’ என தமிழ்நாடு அரசு அறிவித்ததா?

This news Fact Checked by Newsmeter இந்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாட தேர்வு கட்டாயமில்லை என்று திமுக அரசு அறிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பகிரப்பட்டு வருகிறது.…

Did the Tamil Nadu government announce that ‘Tamil subject is not compulsory in the 10th standard public examination’?

This news Fact Checked by Newsmeter

இந்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாட தேர்வு கட்டாயமில்லை என்று திமுக அரசு அறிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த அக்டோபர் 14-ம் தேதி நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிவித்தார். இந்நிலையில், “இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடம் கட்டாயமில்லை என திமுக அரசின் கல்வித்துறை அறித்துள்ளது. மேலும் சிறுபான்மை மொழிகளில் தேர்வை எழுதிக்கொள்ளவும் அனுமதி. தமிழையே தேவையில்லை என்று ஒதுக்கியதன் மூலம் உங்களின் போலி தமிழ்ப் பற்று வெளிப்பட்டுவிட்டது முதல்வரே.! இதுவா நீங்கள் தமிழ் வளர்க்கும் லட்சணம்?” என்ற பதிவு சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.

உண்மை சரிபார்ப்பு:

நியூஸ்மீட்டர் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் உண்மையில் மொழி சிறுபான்மையினருக்கு இத்தகைய அறிவிப்பை 2024-25 ஆம் கல்வியாண்டிற்கு மட்டும் திமுக அரசு அறிவித்துள்ளது என்பது தெரியவந்தது.

இதன் உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் சர்ச் செய்து பார்க்கப்பட்டது. அப்போது, கடந்த மார்ச் 13-ம் தேதி ABP Nadu இது தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. அதில், “10ஆம் வகுப்பில் தமிழ் மொழி அல்லாத, சிறுபான்மை மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள், 2023-2024ஆம் ஆண்டிற்கு மட்டும் தமிழ் மொழிப்பாடம் எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 2023-24-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்ற முடிந்து கடந்த மே மாதம் அதன் முடிவுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக 2024-25-ம் ஆண்டு பொதுத்தேர்வில் மாற்றம் ஏதும் கொண்டுவரப்பட்டுள்ளதா? என்பது குறித்து தேடுகையில் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி இது தொடர்பாக ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, “தமிழ்நாட்டில் கட்டாய தமிழ் கற்றல் சட்டம் 2006-ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் தனியார் பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை மாணவர்கள் தமிழை ஒரு பாடமாக எடுத்து படிக்க வேண்டும். இந்த கட்டாய தமிழ் கற்றல் சட்டம் 2015-2016 முதல் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு, 2024-25-ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத் தேர்வினை எழுத வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

இத்திட்டம் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு கடந்த ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அதற்கு சிறுபான்மையினர் பள்ளிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடம் கட்டாயம் என்பது இல்லாமல் விருப்பப் பாடமாக எழுத அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில், அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் லதா, அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், “பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் அனைத்து தேர்வர்களும் பகுதி ஒன்றில் தமிழ் மாெழியை மட்டுமே மொழிப்பாடமாக தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நியூஸ்மீட்டர் தேடலின் முடிவாக இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடம் கட்டாயமில்லை என்று திமுக அரசு அறிவித்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் தவறானது என்றும் மொழி சிறுபான்மையினருக்கென இத்தகைய அறிவிப்பை 2024-25-ம் கல்வியாண்டிற்கு மட்டும் திமுக அரசு வெளியிட்டிருந்தது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Note : This story was originally published by Newsmeter and Republished by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.