35.8 C
Chennai
June 28, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் செய்திகள் விளையாட்டு

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?


நந்தா நாகராஜன்

கட்டுரையாளர்

பல லட்சம் பணம் கொடுத்து இந்தியா, பாகிஸ்தான் போட்டியை காண வந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்றைய ஆட்டம் பூர்த்தி செய்ததா?: 8-0 என்று பெருமை கொள்வதால் பாகிஸ்தான் அவ்வளவு தரக்குறைவான அணி ஆகிவிட முடியாது. – இந்தியா, பாகிஸ்தான் போட்டி ஒரு அலசல்

இந்தியா, பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் என்றாலே, மைதானத்தில் இருக்கும் 1 லட்சத்து 32 ஆயிரம் பேர் மட்டுமல்ல, உலகின் பல மூலைகளில் இருந்தெல்லாம் பல கோடி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிர செய்யும் வரலாற்று சிறப்புமிக்க போட்டியாக தான் பார்க்க தூண்டும். நொடி பொழுதில் கூட கண் சிமிட்ட முடியாத நிகழ்வுகள் திகட்டல் இல்லாத காட்சிகளுடன் என்னத்தான் தொலைக்காட்சியில் நேரலையாக பார்த்தாலும், நேரில் பார்க்கும் அனுபவத்தை, வாழ்நாளில் ஒருபோதும் மறந்து விட முடியாது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அது உங்களுக்கு சொன்னால் புரியாது, உங்கள் நண்பர்கள் யாராவது இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் போட்டியை என்றாவது, எங்காவது நேரில் சென்று பார்த்த அனுபவம் உண்டா எனக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். சரி அது ஒருபுறம் இருக்க, இன்று நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டம் குறித்து பதிவிட வேண்டியது நிச்சயம்… பொதுவாக இந்தியா, பாக் இடையேயான கிரிக்கெட் பந்தம் 1992 முதல் தொடர்ந்து வந்தாலும், ஒவ்வொரு டிகேட்களிலும் துளி அளவும் ஒரே மாதிரியான நெருப்பான ஆட்டத்தை தான் இரு அணிகளும் வெளிப்படுத்தி வருகின்றன. இன்றைய போட்டி கூட அதே போல தான், ஆனால் கொஞ்சம் ஓவர் எக்ஸ்பெக்டேஷன் என்று தான் சொல்ல முடிகிறது. போட்டியில் களம் காணும் இரு அணிகளும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்திற்கு வந்தடைந்த நேரம் முதலே இந்த பரபரப்பு தொற்றிக் கொண்டது.

சுப்மன் கில் டெங்குவில் இருந்து குணமடைந்து அகமதாபாத் திரும்பிய போது அவரை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்தது முதல், ஷாஹீன் ஷா அஃப்ரிடி இடம் செல்பி கேட்கப்பட்ட போது, போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்ததற்கு பிறகு செல்பி எடுத்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்த செல்ஃப் கான்பிடன்ட் பதில் வரை என ஒவ்வொன்றும் ஹைப்பர் டென்ஷனை கூட்டிய நிகழ்வுகள் மட்டுமே..இந்த ஹைப்புக்கு தகுந்தாற்போல் இன்று நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தான் போட்டி நடந்து முடிந்திருக்கிறதா என்று கேட்டால், அதற்கு ஒரே பதில் ”NO” மட்டும் தான்… ஹைப்பை தாண்டி, இரு அணிகளுக்கும் இடையேயான பலம் மற்றும் பலவீனம் பொறுத்து தான் இன்றைய போட்டி முடிவை கொடுத்திருக்கிறது. எங்கெல்லாம் பாகிஸ்தான் நினைத்ததை நடத்தி முடிக்க வில்லை? எங்கெல்லாம் இந்தியா ஹோம் அட்வாண்டேஜை பிரதிபலிக்கச் செய்தது? இவைகளெல்லாம் தான் கீ பாயிண்டுகள். அகமதாபாத் மைதானத்தில் 11 ஆடுகளங்கள் இருப்பினும், அதில் மிக முக்கியமான 5 ஆடுகளங்கள் கரிசல் மண் ஆடுகளங்கள் ஆகும்.

பேட்டிங் விக்கெட்டுக்கு உகந்த இந்த ஆடுகளங்களில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தாலும் சரி, பேட்டிங் தேர்வு செய்தாலும் சரி, இரு அணிகளின் பேட்டிங்கிற்கும் சாதகமான வெளிப்பாட்டுடன் ஆடுகளங்கள் உதவக்கூடும். இருப்பினும் மிகப்பெரிய ஒரு போட்டி என்றால் அந்த அழுத்தத்தை குறைக்க உதவுவதே டாஸ் வெற்றி தான். ரோகித் சர்மாவின் எண்ணம் போலவே டாஸ் இந்தியா பக்கம் சாதகமான இந்த வெற்றிக்கு ஒரு முக்கிய புள்ளியாக பார்க்கப்பட்டது.

முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த இந்தியா, பாகிஸ்தான் அணியை டார்கெட் கொடுக்கச் செய்ய அழைத்த நிலையில், முதலில் பேட்டிங் செய்ய வந்த பாகிஸ்தான் பேட்டர்கள் அப்துல்லா சபிக் மற்றும் இமாம் உல் அக் ஆகியோர் நல்ல தொடக்கத்தை கொடுத்தது இந்தியாவின் முதன்மை விக்கெட்டுகளுக்கு டார்கெட்டை கொஞ்சம் காத்திருக்கச் செய்தது.

இருந்தாலும் அடுத்தடுத்து லைனில் தாக்கத்தை தூண்டிய சிராஜ் முதல் விக்கெட்டாக அப்துல்லா சஃபிக்கை தூக்கி 41 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை உடைத்தாலும், தொடர்ந்து 20 ஓவர்களுக்கு பாகிஸ்தான் பேட்டிங் நிலையாக இருந்தது. இமாம் உல் அக், பாபர் ஆசம் இடையேயான 32 ரன்கள் பார்ட்னர்ஷிப் மற்றும் பாபர் ஆஸம், முகமது ரிஸ்வான் இடையேயான 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் பாகிஸ்தானை வலுவான நிலையில் வைத்திருந்தது.

29.4 ஓவரில் பாபர் ஆசம், 33.6 வது ஓவரில் முகமது ரிஸ்வான் என இரண்டு விக்கெட்டுகளையும் எடுத்த பிறகு ஆல் ரவுண்டர்களை நம்பியும், மிடில் ஆர்டர் பேட்டர்களின் தாக்குதலை நம்பியும் இருந்த பாகிஸ்தானுக்கு, இந்திய அணியின் அடுத்தடுத்து பௌலிங் அட்டாக் மட்டுமே முற்றுப்புள்ளி வைத்தது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக பக்கம் பக்கமாக எழுதப்பட்ட இந்திய அணியின் பந்து வீச்சின் மீதான அனைத்து விமர்சனங்களும் சிதற விட்டிருக்கிறது இந்திய அணியின் பவுலிங் யூனிட்.

ஆம், இந்தியாவின் பிளேயிங் 11 குறித்து பேசும் போது முன்னதாக ஏன் இன்று அஷ்வின் இடம் பெறவில்லை? சுப்மன் கில் மீது ஏன் அழுத்தத்தை கொண்டு வருகிறீர்கள்? ஷர்துள் தாக்கூர் அணியில் எதற்காக இருக்கிறார் என கேட்கப்பட்டது எல்லாம் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆவதற்கு முன்பே, வெற்றியை உறுதி செய்துவிட்டது இந்தியா.

அடுத்தடுத்து பாகிஸ்தான் அணியை துவம்சம் செய்த இந்திய அணியின் பவுலிங் யூனிட் பாகிஸ்தானை 191 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து நாங்கள் ஹோம் அட்வாண்டேஜ் மட்டும் அல்ல, ஒரு அணியாக அற்புதங்களை நிகழ்த்தக் கூடியவர்கள் தான் என சொல்லாமல் சொல்லிவிட்டது இந்திய அணி. 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி பாகிஸ்தான் பேஸ் பேட்டரிகள் சார்ஜை தொடக்கத்திலேயே குறைப்பதில் கவனம் செலுத்தியது. அதற்கு ஏற்றார் போல சுப்மன் கில், ரோகித் சர்மா இணை பாகிஸ்தான் இன் ஷாஹீன் ஷா அஃப்ரிடி மற்றும் ஹசன் அலி ஸ்பெல்லை கவர் டிரைவ்களால் அலங்கரித்தனர். இந்த இணையே இந்தியாவின் வெற்றியை உறுதி செய்துவிடும் என உற்சாகத்துடன் ரசிகர்கள் கோஷமிட, அது சுப்மன் கில் ஆழ் மனதுக்குள் தைரியம் ஏற்படுத்தியதோ என்னவோ பேக்வர்ட் பாயிண்ட் ஃபீல்டரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் சுப்மன் கில். பரவாயில்லை எப்படியும் ஒட்டுமொத்த அகமதாபாத் மைதானத்தின் 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த தருணம் அது.

வீரநடை போட்டு விராட் கோலி உள்ளே நுழைய மைதானமே ஆர்ப்பரித்தது மட்டுமல்லாமல், மைதானத்தின் புல்வெளிகளில் சூழ்ந்திருந்த டியூவ் நீர் துளிகளும் ஆட்டம் போட்டது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விளையாடிய கோலிக்கு எதிரே நின்று ஆடிய ரோகித் சர்மாவும், அங்கிருந்து தனது கேப்டன்ஷிப் இன்னிங்சை தொடங்கியதை அடுத்து, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டெல்லியில் எந்த ஃபார்மை வைத்திருந்தாரோ, அதே ஃபார்மை அகமதாபாத்தில் ஃபார்முலாவாக அப்ளை செய்து அனல் பறக்க விட்டார்.

என்னதான் கோலி வந்த வேகத்தில் தனது ஜெர்சி நம்பரிலான பந்துகளை பிடித்து 16 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினாலும், கேப்டன் ரோகித் சர்மாவின் பொறுப்பான ஆட்டம், கோலி இடையே 56 ரன்கள் பார்ட்னர்ஷிப், ஷ்ரேயஷ் ஐயர் இடையேயான 77 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் இடம்பெற செய்தது. அவ்வப்போது ஷாஹீன் ஷா அஃப்ரிடியை அட்டாக் செய்ய கொண்டு வந்த பாபர் ஆஸமிற்கு, ரோகித் சர்மாவின் விக்கெட்டை எடுத்து கொடுத்து நம்பிக்கை கொடுத்தாலும், இந்தியா செல்ல வேண்டிய கரை குறைந்த தூரம் மட்டுமே இருந்தது குளறுபடியை கொடுத்தது.

தன்னால் முடிந்த அனைத்தையும் சுழற்பந்து வீச்சாளர்களை வைத்தாவது செய்து முடிக்கலாம் என்று நினைத்த பாபர் ஆசமிற்கு, ”நீங்களுமா” என்பது போன்ற ரியாக்‌ஷன்களை வாரி வழங்கிய பாக் பந்துவீச்சாளர்கள், பார்ட் டைம் பவுலர்கள் போல செயல்பட்ட விதம் இந்தியாவின் வெற்றியை 30.3 ஓவர்களிலேயே தீர்மானித்தது. இதில் நீண்ட நேரம், உலக கோப்பை போட்டிகளில் தனது முதல் அரை சதத்திற்கான தேடலில் இருந்த ஷ்ரேயாஷ் ஐயர் ஆசையையும் சாத்தியமானது தான் இந்திய ரசிகர்களுக்கு திருப்தியான வெற்றியையும் ருசிக்க செய்தது.

ஒரு வழியாக, பல ஆயிரம் கோடி ரூபாய்களை செலவு செய்து மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை கூட்ட தயார் செய்யப்பட்ட விளம்பரங்களை, இந்த 6 மணி நேரம் 10 நிமிட போட்டியானது புஸ் என்று ஊத்தி மூழ்கியது என்று தான் சொல்ல வேண்டும். இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியை காண பல்வேறு இடங்களில் இருந்து வந்து, லட்சக்கணக்கில் செலவு செய்து தங்கியிருந்தவர்கள், டிக்கெட்டுகளுக்கு பணத்தை வாரி கொட்டியவர்கள், பொய் காரணங்களை சொல்லி மருத்துவமனைகளில் சிகிச்சை எடுப்பது போல அறைகளை முன்பதிவு செய்து போட்டியை கண்டுகளித்தவர்கள் என அனைவரும் எதிர்பார்த்தது என்னவோ, நுனி சீட்டுகளில் அமர்ந்து போட்டியை காண்பதும், நகம் கடித்துக் கொண்டே போட்டியை ரசித்துப் காண்பதுமாக தான் இருந்திருக்கும். ஆனால் முதல் பாதியில் இந்தியாவின் டாமினேஷன், இரண்டாவது பாதியில் இந்தியாவின் லேமினேஷன் என முழுக்க முழுக்க ஒரே பக்கமாக முடிந்துவிட்டது இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் எனும் பிரமாண்ட சுவாரஸ்யம்.

பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் இதுவரை உலகக் கோப்பை தொடர்களில் களம் கண்ட 7 போட்டிகளில் தோல்வி அடைந்த வரலாற்றை மாற்ற மாஸ்டர் பிளான் களுடன் களம் கண்டிருக்கலாம். ஆனால் ஹோம் அட்வாண்டேஜ் என்பதை உரக்கச் சொல்லி, 8-0 என மேலும் ஒரு வெற்றியை பதிவு செய்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறது ரோகித் சர்மா அண்ட் கோ. இதுவரை உலகக் கோப்பை தொடர்களில் பாகிஸ்தானை வீழ்த்திய கேப்டன்களில் ரோகித் சர்மா பெயரும் இனி இடம்பெறும். ஒருவேளை அரையிறுதி அல்லது இறுதிப் போட்டிகளில் பாகிஸ்தானை சந்தித்து தோல்வி அடையாவிட்டால் இது நிரந்தரமே.

இந்த உலகக் கோப்பை தொடர் முழுவதும் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு முதல் டிக்கெட் விற்பனை வரை குறைகளை மட்டுமே விமர்சனங்களாக ரசிகர்கள் வைத்து வரும் நிலையில், அதன் பிரதிபலிப்பை கடந்த வாரம் முழுவதும் நடந்து கொண்டிருக்கும் இந்தியா அல்லாத போட்டிகளில் நாம் கண்டிருக்கக் கூடும். அதிலும் குறிப்பாக தொடக்க போட்டியில் நியூசிலாந்து, இங்கிலாந்து போட்டிக்கு கூட, அகமதாபாத் மைதானத்தின் 1 லட்சத்து 32 ஆயிரம் சீட்டுகளில் 40, ஆயிரம் சீட்டுகள் மட்டுமே நிறைந்தது ஒரு முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகிறது.மேலும் இதுவரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெற்று முடிந்துள்ள இந்தியா அல்லாத போட்டிகளில், மற்ற அணிகளுக்கான ஆதரவு என்பது மற்ற நகரங்களை காட்டிலும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்பார்த்ததை விடவே அதிகம் இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து, வங்கதேசம் இடையேயான போட்டிக்கு 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருக்கைகளை ரசிகர்கள் நிரம்பியிருந்தது பிசிசிஐ தரப்பில் மகிழ்ச்சியை கொடுத்திருக்கக் கூடும்.

ஆனால் இன்று நடைபெற்ற இந்தியா, பாக் இடையேயான போட்டியில் இருந்து தான் உலகக் கோப்பை திருவிழா தொடங்கியது போல நல்ல வரவேற்பை பெற்றிருந்தது இந்தியா, பாக் ஆட்டம். இனி வரும் போட்டிகளில் இந்தியா வெற்றி பெறுவது எளிதானாலும், இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி அடுத்த கட்டத்திற்கு முன்னேறி இருப்பது முழுமையான திருப்தியை இந்திய ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.

  • நந்தா நாகராஜன், ஸ்போர்ட்ஸ்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading