பாலின சமத்துவத்திற்காக போராடியவர் கருணாநிதி என்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி திமுக மகளிரணி சார்பில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மகளிர் உரிமை மாநாடு நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் காங். முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங். பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி, கார் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் லெஷி சிங் – பீ, டெல்லி துணை சபாநாயகர் ராக்கி பிட்லன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுஷ்மிதா தேவ், தேசியவாத காங். கட்சி செயல் தலைவர் சுப்ரியா சுலே, கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஆனி ராஜா, சமாஜ்வாடி எம்.பி டிம்பிள் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
அப்போது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சகோதர சகோதரிகளே வணக்கம் என தமிழில் உரையை தொடங்கி பேசியதாவது:
இந்த அருமையான நாளில் மாபெரும் தலைவரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மகளிர் உரிமை மாநாட்டிற்கு என்னை அழைத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. தன்னுடைய வாழ்க்கை முழுவதும் ஏழை எளிய மக்களுக்காக உழைத்தவரும் இந்திய தாயின் தவப்புதல்வர்களில் ஒருவரும் , நம்மால் கலைஞர் என அழைக்க கூடிய கருணாநிதி ஒரு பன்முக தன்மை கொண்ட தலைவர்.
ஒரு எழுத்தாளராக பத்திரிக்கையாளராக ஒரு முதல்வராக, ஒரு நிர்வாகியாக அவர் ஆற்றிய பணிகள் மகத்தான பணிகள். மாநிலம் ,மொழி, சாதி, மத நம்பிக்கை இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு எல்லோரையும் சமத்துவமாக பார்க்கும் ஒரு அருமையான தத்துவத்தில் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். தன்னுடைய வாழ்நாளின் போது அதிகமாக பேசப்படாத பாலின சமத்துவத்தை அவர் சிந்தித்து அதற்காக போராடும் போராளியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார் . இன்று அது தேசிய இயக்கமாக கொண்டாடப்படும் சூழல் உருவாகி உள்ளது.
நம்முடைய பெண்கள் இந்தியாவில் மகத்தான சாதனைகளை செய்துள்ளனர். பல தடைகளை மீறி சாதனை செய்துள்ளனர். இன்று இந்திய பெண்கள் பல்வேறு துறைகளில் ஒளிர்கிறார்கள். மக்களின் தலைவர்களாக பெண்கள் ஆற்றும் பணி மகத்தானது. நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். இன்னும் பல்வேறு தடைகளை தாண்ட வேண்டும். இருந்தாலும் நம்முடைய ஏழை எளிய சகோதரிகள் இன்னும் ஏராளமான தடைகளை தாண்டித்தான் சமத்துவத்தை பெறும் சூழல் உருவாகி உள்ளது.
ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ்ஜில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை கொண்டு வந்த சட்டமானது பெண்களுக்கு சமூகத்தின் அடித்தளத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, பெண்களுக்கு தலைமை பொறுப்புகளை வழங்கிய சட்டமாக அமைந்தது. நாடாளுமன்றத்தில் தற்போது நிறைவேற்றப்பட்டு இருக்கக்கூடிய சட்டம் நாம் எடுத்துக் கொண்ட முயற்சியும் கூட.
ஆனால் இந்த சட்டம் என்று நடைமுறைப்படுத்தப்படும்? எப்போது அமல்படுத்தப்படும்? என்ற நிரந்தரமற்ற தன்மையிலே உருவாகியுள்ளது. நாளை இந்தியா கூட்டணி வந்து தான் இந்த சட்டத்தை நிறைவேற்றி தர வேண்டிய சூழலை உருவாக்கும் என்பது திட்டவட்டமாக உள்ளது. அண்ணா அவரைத் தொடர்ந்து கருணாநிதி தலைமையில் அமைந்த அரசு எடுத்து கொடுத்த முன்னெடுப்புகளும், செயல்படுத்திய திட்டங்களும் பெண்களுக்கான புரட்சிகரமான திட்டங்களைச் செயல்படுத்தியது. அதன் அடிப்படையில் தான் இந்தியாவே புகழ்ந்து கொண்டாடக்கூடிய மகளிர் சமத்துவத்தை கொண்டாட கூடிய ஒளி விளக்காக தமிழ்நாடு திகழ்கிறது என்று சொன்னால் மிகையல்ல.
தமிழ்நாட்டில் காவல் துறையில் இன்று நான்கில் ஒரு பங்கு பெண்கள் என்ற சூழ்நிலை உள்ளது. கருணாநிதி செய்த சட்டத்திருத்தங்கள் முக்கியமானது என்னவென்று சொன்னால், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை செயல்படுத்தியது. அதன் விளைவாக அரசுப் பணிகளில் 30% பெண்களாக இருக்கிறார்கள்.
இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் செயல்படுகின்ற அரசு 30 விழுக்காட்டை 40 விழுக்காடாக மாற்றி பெண்களை பெருமைப்படுத்தியுள்ளது. தாய், பால் குடிக்கும் குழந்தைகளுக்காகவும் செயல்படுத்தப்படும் திட்டத்தை தமிழ்நாடு சிறப்பாக செயல்படுத்தியதால் தான் இந்தியாவில் தமிழ்நாட்டில் மிகக் குறைந்த நிலையில் குழந்தை இறப்பு இருப்பதற்கு காரணம்.
கடந்த 9 ஆண்டுகளாக மோடி அரசின் நடவடிக்கைகள், கடந்த 70 ஆண்டுகளில் நாம் செய்த நல்ல முயற்சிகளை எல்லாம் சீரழிக்கின்ற வகையில் செயல்படுவது மிகப்பெரிய பிரச்சனை. இந்த பெண்களுக்காக புதிதாக எதையும் உருவாக்க தயாராக இல்லை. சமத்துவத்துவமும், அறம் சார்ந்த சமுதாயமும் கடந்த 9 ஆண்டுகளாக சீரழிக்கப்பட்டு வருகிறது.
இந்தியா கூட்டமைப்பு பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தை நிச்சயமாக நிறைவேற்றியே தீரும். அனைவரும் சேர்ந்து போராடுவோம் நாம் அனைவரும் இணைந்து நிச்சயமாக இதனை சாதிப்போம்.







