இந்தியாவில் முதலாவதாக தமிழ்நாட்டில் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் தேவாங்கு சரணாலயம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவின் முதல் தேவாங்குகளுக்கான வனவிலங்கு சரணாலயம், தமிழ்நாட்டில் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், தேவாங்கு சரணாலயம் அமைக்க இரண்டு மாவட்டங்களிலும் 11,806 ஹெக்டேர் பரப்பளவு அமைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேவாங்குகள் சிறிய, இரவு நேர பாலூட்டிகள். அவை மரவகை இனத்தைச் சார்ந்தது. தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை மரங்களில் கழிக்கின்றன. இந்த இனம் விவசாய பயிர்களுக்கு சேதம் உண்டாக்கும் பூச்சிகளை வேட்டையாடி விவசாயிகளுக்கு நன்மை பயக்கின்றன. இந்த இனங்கள் சுற்றுச்சூழல் மற்றும் நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்பில் முக்கிய பங்காற்றுகின்றன.
இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் தேவாங்கு இனத்தினை அழிந்து வரும் இனமாக பட்டியலிட்டுள்ளது. இந்த உயிரினங்களின் வாழ்விடத்தை மேம்படுத்துதல், பாதுகாத்தல் மற்றும் இவைகளுக்கான அச்சுறுத்தல்களைத் தணித்தல் ஆகியவற்றின் மூலமே இவைகளின் எண்ணிக்கையைப் பெருக்க இயலும்.
எனவே, அழிந்து வரும் இந்த தேவாங்குகள் இனத்தை பாதுகாக்க தமிழக அரசு உறுதிபூண்டுள்ளது. கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், 11,806 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள வனப்பகுதிகள், தேவாங்குகளின் முக்கிய வாழ்விடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அதன்படி அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972ன் கீழ் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 11,806.56 ஹெக்டேர் பரப்பளவில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக “கடவூர் தேவாங்கு சரணாலயம்” அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-இரா.நம்பிராஜன்








