நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு அதிகரித்து வரக்கூடிய நிலையில் தற்போது டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு ஒரே நாளில் 331 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 578ஆக அதிகரித்துள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது.
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 331 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 142 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்லியில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது டெல்லியின் தொற்று பாதிப்பு விகிதம் 0.68% ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய பாதிப்பை விட இன்று 0.5% அதிகம் பதிவாகியுள்ளது. இதே நிலை இரு நாட்களுக்கு நீடிக்குமேயானால் டெல்லியில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரவு 11 முதல் விடியற்காலை 5 மணி வரை பொதுமக்கள் நடமாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒமிக்ரான் தொற்றை பொறுத்த அளவில் நேற்று 72ஆக இருந்த பாதிப்பு இன்று 149ஆக அதிகரித்துள்ளது.
பள்ளி, கல்லூரிகள், இதர கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் 50% எண்ணிக்கையில் மட்டும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. அதே போல பேருந்துகள், மெட்ரோ ரயில் சேவை ஆகியவையும் 50% எண்ணிக்கையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.








