தமிழ்நாடு அரசு, துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என துப்பாக்கிச் சுடும் வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெல்லி மற்றும் போபாலில் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சார்பில் 15-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று, 20-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றனர். இந்நிலையில், பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து இன்று வாழ்த்து பெற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், தமிழ்நாட்டில் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தை உருவாக்கி தரவேண்டும் என அரசை கேட்டுக்கொண்டதாக தெரிவித்தனர். பயிற்சி வளாகங்கள் அமைக்கப்பட்டால், தேசிய மற்றும் அகில உலக போட்டியில் தமிழ்நாடு வீரர்கள் சாதிப்பார்கள் என்றும் அவர்கள் கூறினர்.








