டெல்லி மாணவர்கள் போராட்டம் – திமுக எம்.பி. கனிமொழி நேரில் சென்று ஆதரவு…!

டெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு திமுக எம்.பி. கனிமொழி நேரில் சென்று ஆதரவு அளித்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில் திமுக எம்.பி. கனிமொழி போராட்டக்களத்திற்கு நேரில் சென்று மாணவர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியுள்ளதாவது : திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகிய நாங்கள் இந்த போராட்டத்திற்கு துணை நிற்கிறோம். இதனை தெரியப்படுத்தும் விதமாக நாங்கள் போராட்டத்தில் கலந்து கொண்டோம். நீட் மாணவர்களுக்கு எதிரானது. அவர்களின் கனவுகளுக்கு எதிரானது. ஏழை மாணவர்களுக்கு எதிரானது. இதனால் நீட் தேர்வு கொண்டுவரப்பட்ட காலத்திலிருந்து அதனை எதிர்த்து இருக்கிறோம். அதனை எதிர்த்து வழக்குகளும் போட்டு இருக்கின்றோம்.

திமுக ஆட்சியின் போது நீட்டிற்கு எதிரான மசோதா நிறைவேற்றம் செய்து அனுப்பினோம். அது தற்போது குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக காத்துக் கிடக்கிறது. தொடர்ந்து நீட்டிற்கு எதிரான போராட்டம் என்பதை திமுக நடத்தி வருகிறது. நீட்டிற்கு எதிரான போராட்டம் திமுகவிற்கு புதிதானது அல்ல

நாடு முழுவதும் இருக்கும் இளைஞர்கள் இன்று நீட் தேர்வு எவ்வளவு எதிரானது என்பதை உணர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். திமுக தலைவர் அறிவுறுத்தலின் பேரில் மாணவர்களின் போராட்டத்தில் துணை நிற்கின்றோம் என்பதை நாங்கள் தெரிவித்துள்ளோம்.

போராட்டத்தில் நாங்கள் தொடங்கினாலும், அதனை யார் முன்னெடுத்து சென்றாலும் அவர்களுடன் துணை நிற்க நாங்கள் தயாராக உள்ளோம். மாணவர்கள் மீது மிகப்பெரும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. மாணவர்கள் மீது அக்கறை உள்ளவர்கள் வன்முறையை கட்டவிழ்த்து விட மாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.