தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், குறிப்பாக கும்பகோணம், தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடியாக நெல் கொள்முதல் செய்யாததால், அறுவடை செய்யப்பட்ட நெல் சாலையோரங்களிலும், திறந்தவெளிகளிலும் குவித்து வைக்கப்பட்டுள்ளது. தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், திறந்தவெளியில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டுள்ள நெல் மழையில் நனைந்து, முளைத்து அல்லது அழுகி, பெரும் சேதத்திற்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், திருவாரூர் மாவட்டத்தில் தற்போது பெய்த மழையால் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் முழுவதுமாக வீணாகி இருக்கிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு மற்றும் நிவாரண உதவிகளை இந்த அரசு உடனடியாக வழங்க வேண்டும். இதனால், தங்களது உழைப்பையும் முதலீட்டையும் நம்பி வாழும் விவசாய பெருமக்கள் கடுமையான பொருளாதார இழப்பை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது. விவசாயிகளிடம் உள்ள நெல்லை உடனடியாக அரசு நேரடி கொள்முதல் செய்ய வேண்டும். திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள நெல்லை பாதுகாப்பான கிடங்குகளுக்கு உடனடியாக மாற்ற வேண்டும்.
மழையால் நெல் சேதமடையாமல் தற்காலிக பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகையை விவசாயிகளுக்கு எவ்வித காலதாமதமும் இன்றி உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகளின் உழைப்பை அலட்சியப்படுத்தாமல், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டியது அரசின் முதன்மையான கடமையாகும். எனவே, தமிழக அரசு இந்த விவகாரத்தில் இனியும் காலதாமதம் செய்யாமல், போர்க்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




