இம்மார்டல், ஐயம் கேம், பெத்லகேம்குடும்ப யூனிட் படங்கள் எப்படி இருக்கு?

இந்த வாரம் ஜி.வி.பிரகாஷ், கயாடுலோஹர் நடித்த ‘இம்மார்டல்’, துல்கர்சல்மான் நடித்த ‘ஐயம்கேம்’, நிவின்பாலி நடித்த ‘பெத்லகேம்குடும்பயூனிட்’ உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. இந்த படங்களின் மினி ரிவியூ இதோ

இம்மார்டல்

ஒரு ஹைடெக் அபார்ட்மென்ட்டில், வெறும் 5 ஆயிரம் வாடகை கொடுத்துவிட்டு, அழகான இளம் பெண் கயாடு லோஹருடன் வசிக்கிறார், பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை செய்யும் ஜி.வி.பிரகாஷ். ஒரு கட்டத்தில் இருவரும் காதல் வயப்படுகிறார்கள். அப்போது கயாடு பெண்ணே அல்ல, ஆசை வார்த்தைகளைக் காட்டி இளைஞர்களை தனது வலையில் வீழ்த்தி ரத்தம் குடிக்கும் ஒரு ராட்சத மிருகம் என்ற விஷயம், ஜி.வி.பிரகாஷுக்குத் தெரிய வருகிறது. அந்த மிருகத்தின் பின்னணி என்ன? அந்த அபார்ட்மென்ட்டில் இருந்து, கயாடு லோஹரின் மாய வலையில் இருந்து ஜி.வி. தப்பித்தாரா? அல்லது பலியானாரா என்பது இம்மார்டல் கதை.

மாரியப்பன் சின்னா இயக்கியிருக்கிறார். சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழும், ரத்தம் குடிக்கும் மிருகத்தின் காதல் கதை என்பதால் இம்மார்டல் என தலைப்பு. இதற்கு சாகாவரம் என அர்த்தம். பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை செய்யும், வீடு கிடைக்காமல் தவிக்கும் இளைஞனாக வருகிறார் ஜி.வி.பிரகாஷ். அவருக்கும், பிரஸ் நடத்தும் மாமா, அதில் வேலை செய்யும் நண்பன் ஆதித்யா கதிர் ஆகியோருக்குமான சீன்கள் கலகலப்பு, நல்ல காமெடி. கயாடு லோஹரைப் பார்த்து, அவரது அழகில் மயங்கி காதலிக்கும் சீன்கள், அந்த வீட்டில் நடக்கும் மர்மமான விஷயங்கள், டி.எம்.கார்த்திக் கேரக்டர் என்ட்ரி, அவர் சொல்லும் விஷயங்கள் என அடுத்தடுத்து படம் விறுவிறுப்பாகிறது.

கயாடு யார் எனத் தெரியாமல் ஹீரோ தவிப்பது, அந்த அபார்ட்மென்ட்டை விட்டு செல்ல முடியாமல் ஒருவித மாய வலையில் சிக்கியிருப்பது, அந்த மிருகத்தின் பின்னணியை உணர்ந்து பயப்படுவது, கடைசியில் அதை எதிர்ப்பது என பல இடங்களில் ஜி.வி. ஸ்கோர் பண்ணியிருக்கிறார். கொஞ்ச காலத்துக்குப் பிறகு அவருக்கு வெற்றிப் படம். கயாடு, ஜி.வி. லவ் போர்ஷன் யூத்களுக்கு பிடிக்கும்.

காஸ்ட்யூம், நடை, நடிப்பில் ஸ்டைலிஷாக இருக்கிறார் கயாடு. இந்தப் படத்துக்குப் பிறகு அவருக்கு ரசிகர்கள் அதிகரிப்பார்கள். அவரது கேரக்டர் பின்னணி, அவர் வேறு மாதிரி மாறும் இடமும் சூப்பர். அவரால் பாதிக்கப்பட்டவராக வரும் டி.எம்.கார்த்திக் நடிப்பும் நச். அந்த மிருகம் உருவான ஃபிளாஷ்பேக், கிளைமாக்ஸில் வரும் ட்விஸ்ட், அந்த அபார்ட்மென்ட், அதைச் சுற்றி நடக்கும் மர்மமான விஷயங்கள் திரைக்கதையில் ஸ்ட்ராங்கான பகுதிகள். சாம் சி.எஸ். இசை கதைக்கு வலு சேர்த்திருக்கிறது. இன்னும் சில காட்சிகளில் மிரட்டியிருக்கலாம். மிருகம் போர்ஷனில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம் என சில குறைகள் இருந்தாலும், இந்த வாரம் வின்னர் இம்மார்டல்தான். வித்தியாசமான கதையை விரும்புகிறவர்களுக்கு, த்ரில்லர், ரத்தக்காட்டேரி, ஃபேன்டஸி ஜானரை ரசிப்பவர்களுக்கு, கயாடு லோஹர் ரசிகர்களுக்கு படம் ரொம்ப பிடிக்கும்.

ஐயம் கேம்

தொழிலதிபரான துல்கர் சல்மானுக்கு கார் விபத்தில் ஒரு கை பறிபோகிறது. கை மாற்று அறுவை சிகிச்சை மூலமாக, இறந்த ஒருவரின் இன்னொரு கையை டாக்டர்கள் வெற்றிகரமாக அவருக்கு செட் செய்கிறார்கள். அந்த கை மட்டும் துல்கர் பேச்சைக் கேட்பது இல்லை. இஷ்டத்துக்கு ஏதேதோ செய்கிறது. பிரபல தொழிலதிபரும், தனியார் கிரிக்கெட் டீம் ஓனருமான மிஷ்கினைக் கொல்லத் துடிக்கிறது. அந்த கை யாருடையது? மிஷ்கினைக் கொல்ல நினைப்பது ஏன் என்று ஆராய்கிறார் துல்கர். அது ஒரு விபத்தில் இறந்த கிரிக்கெட் வீரர் ஆண்டனி வர்கீஸின் கை என்பது தெரியவருகிறது. அவருக்கும், மிஷ்கினுக்கும் என்ன பிரச்னை? கடைசியில் அந்த ‘கை’ ஆவி நினைத்ததை சாதித்ததா என்பது ஐயம் கேம் படக்கதை. நகாஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார். தமிழ், மலையாளத்தில் வந்துள்ளது.

பொதுவாக இறந்த ஒருவரின் ஆவி, இன்னொருவர் உடலுக்குள் புகும். தன்னைக் கொன்றவர்களைப் பழிவாங்கும். இதில் கை மட்டும் பழிவாங்குகிறது. இந்த கான்செப்ட் புதுசு. துல்கரின் சூதாட்டம், பண இழப்பு, அவமானம், சண்டை என முதலில் கதை சுமாராகப் போகிறது. அவருக்கு வேறு கை வந்தவுடன், அந்த கை சேட்டை செய்தவுடன் சூடுபிடிக்கிறது. குறிப்பாக, மிஷ்கினை அந்த கை பார்த்தவுடன் அவரைக் கொல்லத் துரத்துவது, அவரிடம் வம்பு இழுப்பது, அதற்கான காரணம் தெரியாமல் துல்கர் தவிப்பது ஆகியவை செம. மிஷ்கினால் பழிவாங்கப்பட்ட கிரிக்கெட் வீரராக ஆண்டனி வர்கீஸ் வருகிறார். அவரது இயல்பான நடிப்பும், கிரிக்கெட் மீதான காதலும் ரசிக்க வைக்கிறது. கயாடுக்கு பிசியோதெரபி டாக்டர் வேடம். பெரிதாக ஈர்க்கவில்லை. வில்லனாக வரும் மிஷ்கின் நடிப்பு படத்துக்கு பெரிய பிளஸ். அவரது ஸ்டைலான நடை, கொஞ்சம் லோக்கலான பேச்சு, கோபம், அந்தக் கண்கள், பழிவாங்கும் தந்திரம் பிரமாதம். கை செய்யும் சேட்டைகள்தான் படத்தின் பலம். ஆனால், அளவுக்கு மீறிய ஆக்‌ஷன், நீளமான கிளைமாக்ஸ், துல்கர் சல்மானின் முதல்பாதியில் வரும் சில சீன்கள் போரடிக்க வைக்கின்றன.

பெத்லகேம் குடும்ப யூனிட்

பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் தயாரிக்க, நிவின் பாலி, மமிதா பைஜூ நடிக்க, பிரேமலு கிரிஷ் ஏ.டி. இயக்கிய படம், தமிழிலும் டப்பாகி வந்துள்ளது. காதல் தோல்வி காரணமாக திருமணம் செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறார் நிவின் பாலி. அந்த ஊருக்கு வரும் மமிதா பைஜூ அவரைக் காதலிக்கிறார். இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம் என்பதால் ஊரில், குடும்பத்தில் காதலுக்கு எதிர்ப்பு வருகிறது. அந்தப் பிரச்னையில் வெளிநாடு செல்கிறார் மமிதா. அவர் திரும்பியதும் அந்தக் காதல் கைகூடியதா என்பது படத்தின் கரு.

மலையாளப் படங்களுக்கே உரிய பாணியில் கதை மெதுவாக, இயல்பாக ஆரம்பித்து மனதைக் கொள்ளை கொள்கிறது. கேட்டரிங் நடத்தும் நிவின் பாலி, அவரது நண்பர்கள், தம்பி, குடும்பம், உறவினர்கள் என அனைத்துக் காட்சிகளும் சினிமாத்தனம் இல்லாமல் நகர்கின்றன. ஆரம்பத்தில் அமைதியாக இருக்கும் மமிதா, அடுத்து அமர்க்களம் செய்கிறார். நிவின் பாலி, மமிதா காதல் காட்சிகள் அவ்வளவு அழகாக இருக்கின்றன. இருவரும் பேசிக்கொள்வது, சினிமா பார்க்கச் செல்வது, காலேஜில் நடக்கும் கலாட்டா, கிளைமாக்ஸ் சீன் ஆகியவை மனதில் நிற்கின்றன.

ஹீரோ, ஹீரோயின் தவிர, நிவின் பாலி டீம், அவர் தம்பியாக வரும் சங்கீத் பிரதாப், அவரது நண்பர்கள், காதல், மமிதா குடும்பம், அவர் மாமா, சங்கீத் பிரதாப் கல்யாணப் பிரச்னை, அதில் ஏற்படும் கலாட்டா ஆகியவை நிஜத்தில் நடப்பது மாதிரி இருக்கின்றன. பல சர்ச் சீன்கள், விழா, அப்போது ஏற்படும் பிரச்னைகள் செம. படம் முழுக்க ஒருவித காமெடி டோன் இருக்கிறது. பலரின் பேச்சில், செயல்களில் குறும்பு, கிண்டல், கேலி அதிகம். அது நம்மைப் படம் முழுக்க எனர்ஜியுடன் ரசிக்க வைக்கிறது. பல கேரக்டர்கள், கிடைக்க வாய்ப்பைப் பயன்படுத்தி நடித்து, கைதட்டல் வாங்குகிறார்கள். ஆர்.பி.பாலாவின் தமிழ் டப்பிங்கும் பக்காவாக செட்டாகி இருக்கிறது. கல்லூரிக் காட்சிகள், கோவா டூர், பெண்களுக்கு இடையேயான உரையாடல்கள், அண்ணன், தம்பி பாசம், குடும்பப் பிரச்னைகள் ஆகியவை இயல்பாகப் படமாக்கப்பட்டுள்ளது கூடுதல் பலம்.

ஒரு சின்ன டவுனில் நடக்கும் கதையானது மனதுக்கு நெருக்கமாகிறது. எந்த இடத்திலும் ஓவர் ஹீரோயிசம், பில்டப் இல்லாமல், ஹீரோ நிவின் பாலியும் கதை, கேரக்டர் தன்மை உணர்ந்து நடித்திருக்கிறார். அவரும் பல இடங்களில் சிரிக்க வைக்கிறார். கிளைமாக்ஸ் எதிர்பார்த்தது என்றாலும் உணர்வுபூர்வமாக இருக்கிறது. படம் பார்த்துவிட்டு வரும்போது, அட, இதுதான் ஃபீல் குட் மூவி. இதுதான் உண்மையான குடும்பப் படம் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

4 இடியட்ஸ்

கோடிக்கணக்கான பணத்தைத் திருட ஆசைப்பட்டு, ஒரு பங்களாவில் சிக்கிக்கொள்கிறார்கள் புகழ், அஷ்வின், திரு, இந்திரன் உள்ளிட்ட 4 நண்பர்கள். அவர்களின் உடல் உறுப்புகளைத் திருடி, அதை விற்க நினைக்கிறார் வில்லனான டாக்டர் வின்சென்ட் அசோகன். அதற்கு அந்த பங்களா வாட்ச்மேன் ரவி மரியா உடந்தை. அந்த டாக்டரின் திட்டத்தில் இருந்து 4 நண்பர்கள் தப்பினார்களா என்பது 4 இடியட்ஸ் கதை. சஜோ சுந்தர் இயக்கியிருக்கிறார்.

பிக்கெட் திருடர்களான நாலு நண்பர்கள், பங்களாவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் கதை. காமெடி, த்ரில்லர் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர். பெரும்பகுதி அந்த பங்களாவில் நடக்கிறது. அப்போது அவர்கள் அடிக்கும் லூட்டி, அவர்களின் நட்பு, ரவி மரியாவை ஏமாற்ற அவர்கள் நடத்தும் நாடகங்கள் ஓகே. அந்த வீட்டில் இருக்கும் ஹீரோயின் பிரக்யாவுக்கும், புகழுக்கும் காதல் வருகிறது. ஒரு கட்டத்தில் அவர் தன்னை போலீஸ் என்கிறார். இப்படி பல டிராக் செல்கிறது. எப்படியாவது அந்த நாலுபேரின் உடல் உறுப்புகளைத் திருடி சம்பாதிக்க நினைக்கிறார் டாக்டரான வின்சென்ட் அசோகன். வெளியில் இருந்து போனில் பேசியபடியே திட்டம் திட்டுகிறார். அப்பாவியாக, காமெடியனாக, சில சமயம் டெரர் பார்ட்டியாக அந்த நண்பர்களிடம் பழகுகிறார் ரவி மரியா. அந்த வீட்டில் இன்னும் சில மர்மங்கள் இருக்கின்றன. கடைசியில் நண்பர்கள் எப்படி தப்பித்தார்கள் என படம் முடிகிறது. பல படங்களில் பார்த்த கதை; காமெடி ஒர்க் அவுட் ஆகாதது ஏமாற்றம்.

7 ஸ்டார் பாய்ஸ்

ஒரு சின்ன கிராமத்தில் வசிக்கும் டீன் ஏஜ் சிறுவர்களுக்குப் புட்பாலில் சாதிக்க வேண்டும். உலக அளவில் பிரபலமாக இருக்கும் புட்பால் வீரர் மெஸ்சி மாதிரி ஆக வேண்டும் என ஆசை. ஆனால், அவர்களுக்கு விளையாட மைதானம் கிடைப்பதில் பிரச்னை. போட்டியில் கலந்துகொள்ள பல தடைகள். அப்போது அவர்களுக்கு பலர் உதவுகிறார்கள். 7 ஸ்டார் பாய்ஸ் என்ற பெயரில் 7 சிறுவர்கள் அணி அமைத்து, அவர்கள் ஊரில் நடக்கும் போட்டியில் கலந்துகொள்கிறார்கள். பலம் வாய்ந்த மற்ற அணிகளை அவர்கள் ஜெயித்தார்களா? அவர்கள் கலந்துகொள்ளும் போட்டிகளில் என்னென்ன நடக்கிறது என்பதை பரபரப்பாக, விறுவிறுப்பாக சொல்லும் படம் 7 ஸ்டார் பாய்ஸ். நிகில் பிரேம்ராஜ் இயக்கியிருக்கிறார். கதைநாயகனாக வரும் ஆண்டனி வர்கீஸ் தவிர, மற்றவர்களில் பலர் மலையாள நடிகர்கள். பிரபல புட்பால் வீரர் ஐ.எம்.விஜயன் சிறுவர்கள் அணிக்கு உதவும் முக்கியமான வேடத்தில் வருகிறார்.

ஒளிப்பதிவாளர் ஃபைஸ் சித்திக், ஜேக்ஸ் பீஜாயின் இசை, அப்துல்லாவின் படத்தொகுப்பு ஆகியவை நிஜ புட்பால் போட்டியை நேரில் பார்க்கும் ஃபீலிங்கை ஏற்படுத்துகின்றன. நிகில் பிரேம்ராஜ் இயக்கிய இந்த மலையாளப் படம், விளையாட்டை விரும்புகிறவர்களுக்கு, குறிப்பாக, புட்பால் போட்டி ரசிகர்களுக்கு விருந்து. மலையாளப் பின்னணியில் கதை நகர்ந்தாலும், நமக்கும் அந்த ஜெயிக்கணும் என்ற உணர்வு ஏற்படுகிறது. சிறுவர்களாக வரும் தனிஷ், அமல், பாசில் ஆகியோரை மறக்கப் பல ஆண்டுகள் ஆகும். புட்பால் போட்டிதான் கதைக்கரு என்றாலும், சிறுவர்களின் உலகம், கிராமத்து வாழ்க்கை, காதல், போட்டி விதிமுறைகள், சண்டைகள், எளிய மனிதர்களின் வாழ்க்கை, அன்பு என பல விஷயங்களைப் படம் சொல்கிறது. முதற்பாதி வரை சிறுவர்களின் கனவு, புட்பால் போட்டி, அதில் வரும் தடைகள் என செல்கிறது. இரண்டாம்பாதி முழுக்க போட்டிகளைக் காண்பிக்கிறார்கள். அதில் ஏற்படும் விறுவிறுப்பு, கோல் அடிக்கும் விஷயங்கள் அவ்வளவு அழகாகக் காண்பிக்கப்பட்டுள்ளன. நாம் நிஜ போட்டியைப் பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது. கிரிக்கெட் போட்டி பின்னணியில் பல படங்களைப் பார்த்து இருப்போம். புட்பால் போட்டி பின்னணியில், அதுவும் சின்ன கிராமத்தில் நடக்கும் இந்தப் படத்தின் கரு, நடிப்பு வியக்க வைக்கிறது.

ஏன் என்னை ஏதோ செய்தாய்

ஐ.டி.யில் வேலை பார்க்கும் ஹீரோ டி.ஆண்டனி, மதுமிதா தாஸை சந்திக்கிறார். அது எந்தச் சந்திப்பு என்பது சஸ்பென்ஸ். பின்னர் அவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார். முதலில் தனது நிலையைச் சொல்லி, காதலை மறுக்கும் மதுமிதா ஒரு கட்டத்தில் அவருடன் லிவிங் டுகெதர் ஆக இருக்கிறார். ஆண்டனி நண்பர்கள் அந்தக் காதல் வேண்டாம். அந்தப் பெண் சரியில்லை என்கிறார்கள். அதையும் மீறி திருமணம் செய்யத் துணிகிறார். அதே சமயம் குடிக்கு அடிமையாகிறார். அவர்களுக்கு இடையே சண்டை வர, மதுமிதா பிரிகிறார். அந்தக் கவலையில் மேலும் குடிக்கு அடிமையாகிறார். கடைசியில் அவர்கள் இணைந்தார்களா? பிரிந்து சென்ற மதுமிதாவுக்கு என்ன ஆனது? கடைசியில் வாழ்க்கை குறித்து என்ன முடிவெடுக்கிறார் ஹீரோ என்பது இந்தப் படத்தின் கதை. ஹீரோவே படத்தை இயக்கியிருக்கிறார்.

லைவ் டப்பிங் முறையில் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் படம் டோன் வேறு மாதிரி இருக்கிறது. படத்தின் கதை, காட்சி அமைப்பு, இயக்குநர் சொல்ல வரும் விஷயம், சீன்கள் வழக்கமான படத்தில் இருந்து மாறுபட்டு இருக்கின்றன. குடும்பச் சூழ்நிலை காரணமாக குடிக்கு அடிமையாகும் ஹீரோ வாழ்க்கை, மதுமிதா வந்தபின் மாறுகிறது. பின்னர் சண்டையில் இன்னொரு நிலைக்குச் செல்கிறது. படம் முழுக்க வசனங்கள், உணர்ச்சிபூர்வமான சீன்கள் அதிகம். ஹீரோவும், ஹீரோயினும் நன்றாக நடித்திருக்கிறார்கள். நிறைய ஆங்கில டயலாக் அதிகம். குறிப்பாக, பல சீன்களில் மதுமிதா நடிப்பும், அவரது டயலாக் டெலிவரியும் புதுமையாக இருக்கிறது. இவர்களைத் தவிர சில நண்பர்கள் வருகிறார்கள். ஒரு குழந்தை வருகிறது. அந்தக் குழந்தை சம்பந்தப்பட்ட காட்சிகள் திருப்பம். வில்லானி ஒளிப்பதிவு, கடற்கரை காட்சிகள் அழகு. சினிமாத்தனம் இல்லாமல், வெகு இயல்பாகக் கதை நடக்கிறது. ஹீரோ கேரக்டர் பல ஆண்களின் பிரதிபலிப்பு. அதை சரியாகச் செய்திருக்கிறார்.

குடிக்கு அடிமையாகும் கேரக்டர் என்பதால் படம் முழுக்க குடிக்கிற சீன், தம் அடிக்கிற சீன் அதிகம். அதற்கேற்ப ஹீரோ ஒரு கட்டத்தில் மதுவுக்கு அடிமையானவர்கள் ட்ரீட்மென்ட் எடுக்கும் மையத்தில் சேருகிறார். கிளைமாக்ஸில் தனது தவறை உணர்ந்து, இன்னொரு முடிவு எடுக்கிறார். காதல் கதைகளில் இது வித்தியாசமானது. வழக்கமான ஆடல், பாடல், காமெடி, கமர்ஷியல் இல்லாத படம். குடியால் என்னென்ன பிரச்னைகள் வரும், ஆழமான அன்பு என்ன செய்யும் என்ற கரு ஓகே.

மைத்ரி

பரத் ஜே.எஸ்., காயத்ரி ஷான் நடிப்பில் வந்துள்ள சாதிக்கு எதிரான காதல் கதை மைத்ரி. இந்த முக்கோணக் காதல் கதை சமூகப் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களைப் பேசுகிறது. சமூகத் தடைகள், குடும்ப அழுத்தங்கள் மற்றும் தனிப்பட்ட கனவுகளுக்கு மத்தியில், தங்களின் சுதந்திரமான வாழ்க்கையை உருவாக்கப் போராடும் இளைஞர்கள், எவ்வாறு இணைந்து நீதிக்காகப் போராடுகிறார்கள் என்பதைச் சொல்கிறது. பெண்களின் உடல் மற்றும் இயற்கை சார்ந்த வலிகளை மையமாகக் கொண்டு, ஆண்களுக்கு அதுபோன்ற அனுபவங்கள் கிடைப்பதில்லை என்பதை ஒரு பிச்சைக்காரர் தனது பார்வையில் விவரிக்கும் காட்சி சிந்திக்க வைக்கிறது.

மாறுபட்ட சமூக மற்றும் பொருளாதாரப் பின்னணியைச் சேர்ந்த காதலர்கள் சந்திக்கும் அவமானங்கள், எதிர்ப்புகள் மற்றும் சமூகத் தடைகளை இப்படம் நேரடியாகச் சாடுகிறது. காதலில் தோற்று, வேறு ஒருவரைத் திருமணம் செய்த காதலி மீண்டும் தனது காதலனிடம் பேசுகிறார். ஏன் பேசுகிறார், என்ன நடக்கிறது என்ற ரீதியில் கதை நகர்கிறது. ஹீரோ பரத் ஜே.எஸ். படத்தை இயக்கியும் இருக்கிறார்.

மீனாட்சிசுந்தரம், சிறப்பு செய்தியாளர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.