காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 53-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ் நாடு கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சார்பில் நீர்வளத் துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரதா சாகு மற்றும் காவேரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் அணைகளில் தற்போது நீர்வரத்து இல்லை என்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட இயலாத சூழல் உள்ளதாக கர்நாடக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து தற்போதைக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என காவிரி மேலாண்மை ஆணையத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காவிரி நீர் பங்கீட்டை நிர்வகிக்க உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு அமைக்கப்பட்டன. இந்த 2 அமைப்புகளும் அவ்வப்போது கூடி காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினைகள் பற்றி ஆலோசிக்கின்றன.




