டெல்லி போராட்டம் – மாணவர்களை அடிக்க சொன்னது யார்..? – ராகுல் கேள்வி…!

பணம் படைத்தவர்களுக்கு மட்டும் தான் கல்வி என்ற நிலை உருவாகிவிட்டது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நமது மாணவர்களுக்கு ஏன் இந்த கொடூரம் நடந்தது. நாட்டை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினரை வைத்து நமது மாணவர்களை அடிக்க சொன்னது யார்..? நமது மாணவர்களுக்கு ஏன் இப்படி நடக்கிறது என்பதுதான் கேள்வி. அவர்கள் அப்படி என்னதான் செய்தார்கள்..?” என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து அவர் “பாதுகாப்புப் படைகள் அவர்கள் மீது ஆயுதங்களை நீட்டியுள்ளன. அவர்கள் செய்த தவறு என்ன? அவர்கள் அமைதியான முறையில் போராடுகிறார்கள். தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள்; இந்நாடு தங்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகளைக் கேட்கிறார்கள்.

மாணவர்களாகிய எங்களுக்கு நியாயமான ஒரு கல்வி முறை கிடைக்க வேண்டும்’ என்றுதான் அவர்கள் கேட்கிறார்கள். குழந்தைகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் அளவற்ற மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். ஆனால் கடைசி நேரத்தில் தேர்வு வினாத்தாள் கசிந்துவிட்டதாக அவர்களிடம் கூறப்படுகிறது.

இப்படி கொடூர சம்பவங்கள் நடக்கும் பொழுது தாங்கள் ஏமாற்றப்பட்டதாக மாணவர்கள் நினைக்கும்போது அவர்கள் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள். அந்த தவறான எடு முடிவுகளை எடுக்க தூண்டியவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை ? தற்போது வெளிப்படையான நியாயமான கல்வி அமைப்பு என்பதுதான் தேவைப்படுகிறது. 152 முறை வினாத்தாள் கசிந்துள்ளது. ஆனால் யாரும் தண்டிக்கப்படவில்லை. சுமார் 7 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்று குறிப்பிட்டார்.

பின்னர் அவர், “கல்வி பயின்ற பிறகும் கூட, உங்கள் நாடும் அரசும் உங்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கக் கடமைப்பட்ட அமைப்புகள் ஆகும். ஆனால் வேலைக்கான கதவு அடைக்கப்படுகிறது. பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும், கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். இந்த வினாத்தாள் கசிவுக்கு காரணமான அத்தனை பேரும் தண்டிக்கப்பட வேண்டும்.

பணம் படைத்தவர்களுக்கு மட்டும் தான் கல்வி என்ற நிலை உருவாகிவிட்டது. அரசு ஒவ்வொரு குடிமகனிடமிருந்தும் வரிகளை வசூலிக்கிறது. வரி செலுத்துவோரின் பணம் கல்விக்காக முதலீடு செய்யப்படுவதாக கூறினாலும், நீட் (NEET) தேர்வை நடத்துவதற்காகவே பல நூறு கோடி ரூபாயைச் செலவிடப்படுகிறது” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.