தனியார் நர்சிங் கல்லூரி துவக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இந்திய விமானபடைக்கு சொந்தமான விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்துள்ளார்.
கோவை விமான நிலையம் வந்திறங்கிய அவரை தமிழ் நாடு பொறுப்பு ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கர், கோவை பொறுப்பு அமைச்சர் சம்பத்குமார், மாவட்ட ஆட்சியர், மாநகர் காவல் ஆணையர், பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “குப்புசாமி மருத்துவமனையின் நர்சிங் கல்லூரி திறப்பிற்கு வருகை புரிந்துள்ளேன். பல ஆண்டு காலமாக நமது தாய்மார்களுக்கு பிரசவ வேதனை என்று சொன்னால் அவர்களுக்கு முழுமையான வைத்தியத்தை தந்த முதல் மருத்துவமனை இதுதான். கோவைக்கு வருவது என்றாலும் தமிழகத்திற்கு வருவது என்றாலும்.. அது ஒரு தனி மகிழ்ச்சி. தனி பூரிப்பு” என்றார்.
டெல்லி மாணவர்கள் போராட்டம் குறித்த கேள்விக்கு “அது அரசியல் கேள்வி. அதற்குரிய பதிலை அரசியல் தலைவர்கள் கொடுப்பார்கள். மாணவர்கள் எப்பொழுதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தேசத்தை பாதுகாப்பதற்கு எல்லா மாணவர்களும் முன் வர வேண்டும். ஒற்றுமையாக இருந்தால் தான் உலக அரங்கில் நம்முடைய குரல் எழும்” என்றார்.
இறுதியாக அவர் “தமிழ்நாட்டில் அமைந்துள்ள புதிய அரசுக்கு காலம் தர வேண்டும். அதுதான் உங்களுடைய விருப்பமும். என்னுடைய விருப்பமும் கூட”என்றார்.




