தமிழ் நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது :
காவலர் நியமனத்தை தாமதிப்பது, சட்டம் ஒழுங்கில் அரசு சமரசம் செய்வதற்கு சமம். தமிழகத்தில் கொலை, கொள்ளை, போதைப் பொருட்கள், பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், இந்த ஆண்டிற்கான காவலர் நியமனத்தை அடுத்த ஆண்டிற்கு தள்ளி வைப்பதாக தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
அரசு வேலையை நம்பி உடலளவிலும், மனதளவிலும் இரவு பகலாகத் தங்களை தயார்படுத்தி வரும் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவுகளை இப்படி தவிடு பொடியாக்குவது தான், திரு. விஜய் அவர்களின் மாற்று அரசியலா? அரசின் இந்த நடவடிக்கையால், வயது வரம்பின் காரணமாக நூற்றுக்கணக்கான படித்த பட்டதாரிகள் காவலர் வேலைக்கான தகுதியிழப்பார்கள் என்பதை அரசு உணரவில்லையா? அல்லது குறிப்பிட்ட விகிதத்தினரை இப்படி தகுதி நீக்கம் செய்வது தான் அரசின் திட்டமா?
ஆள் பற்றாக்குறையால் ஏற்கனவே அதிக பணிச்சுமையில் தவிக்கும் காவலர்களுக்கு மேலும் ஒரு வருடத்திற்கு பளுவை கூட்டி, அவர்களை மன உளைச்சலுக்குள் தள்ளுவது தான் “அனைவருக்குமான” அரசா? எனவே, காவலர் நியமனத்தை அடுத்த ஆண்டிற்கு ஒத்தி வைக்கும் அறிவிப்பினை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமெனவும், தமிழகக் காவல்நிலையங்களின் அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் முதல்வரை வலியுறுத்துகிறேன்.
அதுமட்டுமன்றி தமிழக காவல்துறையில் ஆய்வாளர்கள் (Inspectors) பலர், துணைக் காவல் கண்காணிப்பாளர் (Deputy Superintendent of Police) பதவிக்கு தகுதி பெற்றும் கூட, நீண்ட காலமாக பதவி உயர்வு பெறாமல் காத்திருக்கின்றனர். அவர்களின் பதவி உயர்விற்கும் விரைவில் வழிவகை செய்யுமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




