மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் காலமானதைத் தொடர்ந்து 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் செவ்வாடை உடுத்தி, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் விவசாயக் குடும்பத்தில் கடந்த 1941-ம் ஆண்டு பிறந்தவர் பங்காரு அடிகளார். பள்ளிக்கூட ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர், ஆசிரியையாகப் பணியாற்றிய லட்சுமி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அன்பழகன், செந்தில்குமார் என இரு மகன்கள் உள்ளனர்.
1970-ம் ஆண்டு முதல் சக்தி பீடத்தை நிறுவி அருள்வாக்குக் கூறிவந்த பங்காரு அடிகளார், பெண்கள் கருவறைக்குள் சென்று வழிபடலாம் என்பதையும், எல்லா நாட்களிலும் எல்லாப் பெண்களும் கோயிலுக்குள் சாமியை வழிபடலாம் என்ற புரட்சியையும் ஏற்படுத்தினார். கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி, இறுதி காலம் வரை ஆன்மிகத்துக்கும் கல்விக்கும் தொண்டாற்றி வந்தார்.
இந்நிலையில், ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனரான பங்காரு அடிகளார், தனது 83வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். கடந்த ஓராண்டாகவே சிகிச்சை பெற்றுவந்த பங்காரு அடிகளார் மாரடைப்பால் நேற்று காலமானார். அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவருடைய உடலுக்கு அரசியல் பிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இன்று காலை 8.00 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளார். முதலமைச்சர் அஞ்சலி செலுத்திய பிறகு, பங்காரு அடிகளாருடைய உடல் ஆதிபராசக்தி கோயிலில் மாலை 4.00 மணி வரை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட உள்ளது. தொடர்ந்து மாலை 5.00 மணியளவில் கோயில் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
இதையும் படியுங்கள் : சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் – அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்
பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்த வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக, வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் 2500 போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை வெவ்வேறு மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் செவ்வாடை உடுத்தி பங்காரு அடிகளாருக்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.








