காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நபர் நடுரோட்டில் சடலமாகக் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் வெள்ளக்குளம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மாசிலாமணி. இவர் மதுபோதைக்கு அடிமையான நிலையில் நேற்று அரசு தலைமை மருத்துவமனை போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் ரெட்டிபேட்டை பகுதி சாலையில் மாசிலாமணி முகத்தில் ரத்தம் வடிந்த நிலையில் சடலமாகக் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஊழியர்களின் அலட்சியத்தால், மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுவந்த மாசிலாமணி யாரிடமும் சொல்லாமல் வெளியேறி மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்கள் உரிய பதில் அளிக்காததால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இறந்தவரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







