பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தான் தூதர் மகள் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப் பட்டதை அடுத்து, தூதர் குடும்பத்துக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் பாதுகாப்பு படைகள் திரும்புவதை அடுத்து, அந்த நாட்டில் தலிபான்கள், பல்வேறு பகுதிகளை கைப்பற்றி வருகின்றனர். சில மாவட்டங்களில் தலிபான்களின் தாக்குதல்களை சந்திக்க முடியாமல், ஆப்கானிஸ் தான் படையினர், சரணடைந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதரின் மகள் அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் நஜிபுல்லா அலிஹில் (Najibullah Alikhil). இவர் மகள் சில்சிலா (Silsila Alikhil). இவரை, இஸ்லாமாபாத்தில் அடையாளம் தெரியாத சிலர் நேற்று (ஜூலை 16 ) கடத்தினர். பின்னர் கடுமையாக சித்ரவதை செய்து விடுவித்துள்ளனர். காயமடைந்துள்ள அவர் இப்போது மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை இந்த சம்பவம் தொடர்பாக ஆழ்ந்த வருத்தத் தைத் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதர்கள், அவர்கள் குடும்பத்தினர் மற்றும் தூதரக ஊழியர்களின் பாதுகாப்பு ஆழ்ந்த கவலை அளிப்ப தாகவும் தெரிவித்துள்ளது.
அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாகிஸ்தானுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து அவர்களுக்கு பாதுகாப்பை பாகிஸ்தான் அரசு பலப்படுத்தியுள்ளது.







