உத்தரபிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு பிரியங்கா காந்தி பதில் சொல்ல மறுத்து விட்டார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு காலத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் படிப்படியாக அந்த மாநிலத்தில் செல்வாக்கை இழந்து விட்டது. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய மாநில கட்சிகள், பாஜக ஆகியவற்றுக்கு செல்வாக்கு அதிகரித்திருக்கிறது. 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியில் ராகுல் தோற்றுப் போனார். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க பிரியங்கா காந்தியை காங்கிரஸ் களம் இறக்கி உள்ளது. பிரியங்கா காந்தி இப்போது பெரும்பாலான நாட்கள் உத்தரபிரதேச அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். யோகி ஆதித்யநாத் அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை பிரியங்கா முன் வைத்து வருகிறார். குறிப்பாக புலம் பெயர் தொழிலாளர்கள் பிரச்னை, உபியில் நடைபெறும் பாலியல் வன்முறைகள் போன்றவற்றில் உ.பி. அரசுக்கு எதிராக பல போரட்டங்களை அவர் முன்னெடுத்திருக்கிறார்.
இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்துக்கு இரண்டு நாள் பயணமாக இன்று சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பிரியங்கா காந்தி கூறியதாவது:
“உத்தரபிரதேசத்தில் தொடர்ந்து மக்கள் பிரச்னைகளுக்காக காங்கிரஸ் குரல் கொடுக்கும். கடந்த ஒன்றரை ஆண்டாக காங்கிரஸ் கட்சி மக்கள் பிரச்னைகளுக்காக வலுவாக கொடுத்து வருகிறது. 2019ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு மக்கள் பிரச்னைகளுக்காக முதலில் முன்னால் நிற்கின்றனர். சாலையில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டோம். அதற்காக எங்கள் கட்சித் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். உத்தரபிரதேசத்தில் உள்ள பிற கட்சிகள் எல்லாம் மக்கள் பிரச்னைகள் குறித்து பேசுவதில்லை. தெருவில் இறங்கி போராடுவதில்லை. கொரோனா தொற்று காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர்தான் அதிக அளவு நிவாரண உதவிகள் வழங்கினர். நான் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேனா என்பதையெல்லாம் இப்போது சொல்ல முடியாது. சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது பற்றியும் இப்போது சொல்ல இயலாது.” இவ்வாறு பிரியங்கா காந்தி கூறினார்.







