டெல்லி சென்று திரும்பிய கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா வரும் 26ம் தேதி பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனால் கர்நாடகா அரசியலில் சர்ப்ரைஸ் தொடர்கிறது.
கர்நாடகா முதலமைச்சராக எடியூரப்பா பொறுப்பேற்று வரும் 29ம் தேதியுடன் 2 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. எடியூரப்பாவுக்கு எதிராக அவரது அமைச்சரவையிலும், எம்.எல்.ஏ-க்கள் மத்தியிலும் அதிருப்தி குரல் அதிகரித்துள்ளது. எடியூரப்பாவை மாற்ற வேண்டும் என்று கர்நாடகாவின் பாஜக பொறுப்பாளர் அருண் சிங்கிடம் பாஜக எம்.எல்.ஏக்கள் தரப்பில் புகார் அளிக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மேலிடத்தின் அழைப்பின் பேரில் எடியூரப்பா 16ம் தேதியன்று தன் மகனுடன் தனி விமானத்தில் டெல்லி சென்றார். டெல்லியில் அவர் பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளார்.
இதன் பின்னர் பெங்களூரு திரும்பிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, “நான் பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை. இது போன்ற செய்திகளுக்கு எந்த மதிப்பும் இல்லை. நேற்று நான் பிரதமரை சந்தித்தபோது அரிடம் மாநிலத்தின் வளர்ச்சி பற்றியே பேசினேன். மீண்டும் ஆகஸ்ட் முதல் வாரம் டெல்லி செல்கின்றேன்,”என்றார்.
இதன் பின்னர், வரும் 26ம் தேதி பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்கு முதலமைச்சர் எடியூரப்பா அழைப்பு விடுத்ததாக செய்தி வெளியானது. வரும் 290ம் தேதியுடன் எடியூரப்பா முதலமைச்சராக பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில், கர்நாடகா ஆளும் கட்சியான பாஜகவில் தொடர்ந்து குழப்பம் அதிகரித்துள்ளது. இந்த குழப்பத்துக்கு எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தீர்வு காணப்படலாம் என்று தெரிகிறது.







