விஜய் பிரசாரத்திற்கு பயன்படுத்திய பேருந்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை!

தவெக தலைவர் விஜய் பிரசார வாகனத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த செப். 27ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த நவ.25-ம் தேதி தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் டெல்லியில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர்.

இவர்களுடன், தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் கே.பி. மதியழகன், எம்.சி. பவுன்ராஜ் ஆகியோரும் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர். சிபிஐ அதிகாரிகளின் பல்வேறு கேள்விகளுக்கு இவர்கள் பதில் அளித்தனர். டிச.4-ம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலும் சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராகி அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவரிடம் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

இதற்கிடையே, இந்த வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. அதில், ஜன.12-ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில், விஜய் பிரசார வாகனத்தை சிபிஐ அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்துள்ளனர். பனையூரில் இருந்து கரூர் எடுத்து சென்ற சிபிஐ அதிகாரிகள், பேருந்தில் சோதனை செய்து வருகிறார்கள். விஜய் பிரசார வாகனத்தின் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.