மேலூர் அருகே 12 வருடங்களுக்கு பிறகு நிரம்பிய பெரிய அருவி நீர்த்தேக்க அணைக்கட்டு ; நிரம்பி வழியும் காட்சியை பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே முன்னாள் அமைச்சர் கக்கன் காலத்தில் அழகர்மலை பின்புற பகுதியில் கடுமிட்டான்பட்டியில் 27 அடி கொள்ளளவு கொண்ட அணைக்கட்டு கட்டப்பட்டு சுமார் 26 கண்மாய்கள் மூலம் 700 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய அருவி நீர்த்தேக்க அணைக்கட்டு அதன் முழு கொள்ளளவான 27 அடியை நிரம்பி மறுகால் வழியாக நிரம்பி பாய்ந்தோடுகின்றது.
பல ஆண்டுகளுக்கு பிறகு அணை நிரம்பியுள்ளதால் மேலூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டார பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் வருகை தந்து ஆர்வமுடன் செல்பி எடுத்தும் ரசிக்கின்றனர். கடந்த வருடம் இந்த அணைக்கட்டினை புனரமைப்பு செய்ய பொதுப்பணித்துறையால் ரூ.1.90 கோடி ஒதுக்கப்பட்டு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ததும் குறிப்பிடத்தக்கது.
மாவட்டத்தின் எல்லையில் கிராமப்புற பகுதிகளை உள்ளடக்கிய விவசாய நிலங்களுக்காக கட்டப்பட்ட அணையை தற்போது பொதுமக்கள் வந்து பார்வையிட்டு செல்ல உரிய சாலை வசதியினை ஏற்படுத்தி தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு ஆர்ப்பரித்து மறுகால் வழியாக பாயும் தண்ணீர் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.









