விஜயதசமி தினத்தன்று கோயில் திறப்பது குறித்த முடிவை தமிழ்நாடு அரசே எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. கடந்த செப்டம்பர் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்தாண்டு விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் தமிழ்நாடு அரசு தடை விதித்தது. அதனால், மாநிலம் முழுவதும் பாஜக, இந்து முன்னணியினர் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி அளிக்க வேண்டும் என போராட்டங்கள் நடத்தினர்.
இருப்பினும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் படி பொதுமக்கள் கூட்டம் கூட அனுமதிக்க முடியாது என தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்க திட்டவட்டமாக மறுத்தது. இந்நிலையில், வரும் 15-ம் தேதி வெள்ளிக்கிழமை விஜயதசதி தினத்தன்று கோயில்களில் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என பொன்னுசாமி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியே கோயில்கள் வார இறுதி நாட்களில் அடைக்கப்படுவதாக தெரிவித்தார். இதையடுத்து விஜயதசமி தினத்தன்று கோயில்கள் திறப்பது குறித்த முடிவுகளை தமிழ்நாடு அரசே எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.







