தமிழ்நாட்டில் ஜனவரி கடைசி வாரத்திலும், பிப்ரவரி முதல் வாரத்திலும் பெய்த பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மற்றும் இதர மாவட்ட விவசாயிகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த மாதம் கடைசி வாரத்திலும், இம்மாதம் முதல் வாரத்திலும் பெய்த பருவம் தவறிய கனமழையால் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த நெற்பயிர் உள்ளிட்ட பயிர்களை மழை நீர் சூழ்ந்து, சேதம் ஏற்பட்டது. பருவம் தவறிய கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் உணவு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் மூத்த அதிகாரிகளை பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் இதர மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்திடவும், விவசாயகளிடம் நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறியவும் உத்தரவிட்டார்.
அதோடு மட்டுமல்லாமல், கனமழையால் பாதிக்கப்பட்ட அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை நேரடிக் கொள்முதல் நிலையம் மூலம் கொள்முதல் செய்திடும்போது, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, 22 சதவிகிதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய உரிய தளர்வுகளை வழங்கிடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு நேற்று ( 5.2.2023 ) கடிதம் மூலம் கேட்டுக் கொண்டார்.
இந்தநிலையில், சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டு , விவசாயிகளிடம் கருத்து கேட்ட பின் அமைச்சர்கள் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் கனமழையால் பாதிப்படைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்த இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பின்வரும் நிவாரணத் தொகுப்பினை வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
1.கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பயிர் சேத கணக்கெடுப்பு வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறையால் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும்.
2. கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக, பேரிடர் மேலாண்மை விதிமுறைகளின்படி, 33 சதவிகிதம் மற்றும் அதற்குமேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள இனங்களில் ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.
3. நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும்.
4. நெல் தரிசில் உளுந்து தெளித்து கனமழையால் பாதிக்கப்பட்ட உளுந்து விவசாயிகளுக்கு மீண்டும் உளுந்து விவசாயம் செய்ய 50 சதவிகிதம் மானியத்தில் ஒரு ஏக்கருக்கு 8 கிலோ பயறு விதைகள் வழங்கப்படும்.
5. கன மழையால் டெல்டா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நெல் அறுவடையை உடனே மேற்கொள்ள வேளாண் பொறியியல் துறை மூலம் 50 சதவிகிதம் மானியத்தில் நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு வழங்கப்படும்.
6. பருவம் தவறிய கன மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பயிர் அறுவடை பரிசோதனைகள் முடிக்கப்பட்டிருப்பின், கூடுதலாக மீண்டும் தற்போது மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
– யாழன்








