துருக்கியை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 568 ஆக உயர்வு

துருக்கியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 568-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. துருக்கி நாட்டின் தென்கிழக்கு…

துருக்கியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 568-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காஷியான்டெப் நகரில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கமானது 17.9 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நடுக்கம் ஒரு நிமிடம் நீடித்ததாகவும், வீடுகளில் உள்ள ஜன்னல்கள் உடைந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். பின்னர், 15 நிமிடங்களுக்குப் பிறகு, அப்பகுதியில் 6.7 ரிக்டர் அளவு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி – சிரியா எல்லை அருகே அமைந்துள்ளது. நிலநடுக்கம் உணரப்பட்டு, கட்டடங்கள் குலுங்க தொடங்கியவுடன் மக்கள் பீதியடைந்து வீடுகளில் இருந்து வெளியே வந்து தெருக்களில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தில் பெரிய பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இந்த கட்டிட இடிபாடுகளில் ஏரானமானோர் சிக்கியுள்ளனர். சிக்கியவர்களை மீட்பதற்காக துருக்கி – சிரியாவின் மீட்புக் குழுவினர் களமிறக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 360க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது பலி எண்ணிக்கை அதிகரிதுள்ளது. இதுவரை 568க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பலர் படுகாயமடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

சிரியா நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த நிலநடுக்கத்தில் பல கட்டடங்கள் சேதமடைந்ததாக தெரிவித்துள்ளது. அதேவேளை துருக்கில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சிரியா, லெபனான், இஸ்ரேல் உள்பட அண்டை நாடுகளிலும் உணரப்பட்டது.

பிரதமர் மோடி இரங்கல்

 

துருக்கி நிலநடுக்கத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பெரும் உயிர் சேதம் குறித்து வேதனை அடைந்துள்ளேன். உயிரிழந்த குடும்பத்தினருக்கு இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். துருக்கி மக்களுக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக நிற்கும் என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.