செல்போனில் மூழ்கிக்கிடந்ததாகக் கூறி தங்கையை அரிவாளால் அண்ணன் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள வசவப்பபுரம் பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் சுடலைமுத்து. இவருக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இதில் 4வது மாலைராஜா(22), ஐந்தாவது கவிதா(17) உள்ளனர்.
கவிதா கடந்த வருடம் 11ம் வகுப்பை முடித்து விட்டு இந்தாண்டு 12ம் வகுப்பை ஆன்லைன் மூலம் படித்து வருகிறார்.
இந்நிலையில் கவிதா எப்போதும் ஆன்லைனிலும், செல்போனிலும் பொழுதை கழித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 4 மணி அளவில் கவிதா போனில் பேசிக்கொண்டிருப்பதை கண்ட அண்ணன் மாலைராஜா அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே வீட்டில் இருந்த அரிவாளால் கவிதாவை சரமாரியாக வெட்டினார்.
இதில் கவிதா ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்து மாலைராஜா தப்பியோடி விட்டார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கவிதாவை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கவிதா செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும் முறப்பநாடு போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தங்கை செல்போனில் தொடர்ந்து பேசி வந்ததால் ஆத்திரமடைந்த அண்ணன் ஆத்திரமடைந்து தங்கையை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







