கொரோனா தொற்று காரணமாக ஓய்வில் இருப்பதால் கட்சி நிர்வாகிகள் என்னை நேரில் சந்திக்க வரவேண்டாம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, பல்வேறு விவகாரங்களில் கருத்து தெரிவித்து கடுமையான சர்ச்சையை உண்டாக்கியது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அவர், தோல்வியைத் தழுவினார்.
இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி இன்று வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா தொற்று இருந்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது எனது இல்லத்தில் மருத்துவர்களின் ஆலோசனையின்படி தனிமைப்படுத்தி உள்ளேன். ஆகவே அடுத்த பதினைந்து தினங்கள் நான் முழுமையாக ஓய்வு எடுக்க வேண்டியிருப்பதால் யாரும் என்னை நேரில் சந்திக்க வர வேண்டாம்” என வேண்டுகோள் விடுத்தார்.
கடந்த 10 தினங்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்ய அறிவுறுத்திய ராஜேந்திரபாலாஜி, “சமூக வலைதளங்களில் என்னைப்பற்றி வரும் பொய் வதந்திகளை தொண்டர்கள் யாரும் நம்ப வேண்டாம். சாதாரண ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்து லஞ்சம் ஊழலுக்கு அப்பாற்பட்டு அமைச்சர் பதவியிலும் அரசியல் பொது வாழ்க்கையிலும் செயல்பட்டு உள்ளேன், செயல்பட்டும் வருகிறேன்” என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், “சில நேரங்களில் அரசியல் உணர்ச்சி மிகுந்து சில தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தி உள்ளேன். அதற்காக வருத்தம் அடைந்து அரசியலில் பக்குவமாக தற்போது செயல்பட்டு வருகின்றேன்” என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ராஜேந்திர பாலாஜி.
Advertisement: