தலித் மக்களுக்கு அரசு வழங்கிய வீட்டுமனை திட்டத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தை கைவிட்டு சமூக நல்லிணக்கம் காக்க முன்வருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே பேட்டை அருகிலுள்ள ராஜா நகரம் ஊராட்சியில் 200 தலித் குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். தமிழக அரசு இலவச வீட்டுமனை வழங்கும் திட்டத்தின் கீழ் 1994 மற்றும் 2002 அதிமுக ஆட்சிக்காலத்தில் 107 தலித் குடும்பத்திற்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. பட்டா வழங்கி 25 ஆண்டுகளை கடந்தும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நில அளவீடு செய்து இடத்தை ஒப்படைக்காமல் மாவட்ட நிர்வாகம் காலதாமதம் செய்து வந்தனர்.
இதுகுறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நேரில் சந்தித்து முறையிட்டும் தீர்வு கிடைக்காத நிலையில் மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார் கொடுத்தனர். மனித உரிமை ஆணையம் விசாரித்து கடந்த 2021இல் நிலத்தை அளவீடு செய்வதில் காலதாமதம் செய்த மாவட்ட வருவாய் துறைக்கு தலித் பயனாளிகள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.25,000/- அபராதம் செலுத்த வேண்டும் என்றும் மூன்று மாத காலத்திற்குள் நிலத்தை அளவீடு செய்து ஒப்படைவு செய்ய வேண்டுமென்றும் உத்தரவிட்டது. இவற்றையும் மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தவில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தொடர்ந்து குரல் கொடுக்க, தமிழக அரசின் தலையீட்டின் பேரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் அடிப்படையில் திருத்தணி கோட்டாட்சியர் தலைமையில் வருவாய் துறையினர் ஜூன் 2 அன்று ராஜா நகரில் நிலத்தை அளவீடு செய்து தலித் மக்களுக்கு வீட்டுமனை ஒப்படைவு செய்தனர்.ம க்கள் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு இரவு மின் விளக்கை அணைத்துவிட்டு காவல் துறை பாதுகாப்பு இருந்தும் தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் அளவீடு செய்து நடப்பட்ட அனைத்து அளவீடு கல்லையும் பிடுங்கி போட்டுள்ளனர்.
இதையடுத்து, நேற்று முன் தினம் மாலை அதிகாரிகளை சிறை பிடித்தது, சாலை மறியல் நடத்தி போக்குவரத்து தடை ஏற்படுத்தியது, பெண் காவலர்கள் மீது கல் வீசியது மாதிரியான விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துள்ளன. சமூகத்தில் அடித்தட்டில் வாழும் சாதாரண ஏழை எளிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசு வீட்டுமனை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வளவு நீண்ட போராட்டம் நடைபெறுவது வேதனைக்குறியதாக உள்ளது. எனவே தலித் மக்களுக்கு வீட்டுமனை ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டத்தை கைவிட்டு சமூக நல்லிணக்கம் காக்கவும், அமைதி நிலவவும் மக்கள் ஒற்றுமை காத்திட முன்வருமாறும் தலித் மக்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்திலேயே அவர்கள் வீடு கட்டி வாழ்வதற்கும் அவர்களது வாழ்வாதார உரிமைகள் பாதுகாப்பதற்கும் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் முன்வர வேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா







