தமிழில் இந்த வாரம் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான, பிரம்மாண்ட படமான அவதார் பயர் அண்ட் ஆஷ், பொன்ராம் இயக்கத்தில் சண்முகபாண்டியன், சரத்குமார் நடித்த கொம்புசீவி படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த படங்களின் மினி ரிவியூ இதோ…!
அவதார் பயர் அண்ட் ஆஷ்:
ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் அவதார் முதற்பாகம் 2009ம் ஆண்டும், அடுத்த பாகமான அவதார் தி வே ஆப் வாட்டர் படம், 2022ம் வெளியாகி பெரிய வரவேற்பையும், சில ஆயிரம் கோடி வசூலையையும் அள்ளியது. இப்போது 3ம் பாகமான அவதார் பயர் அண்ட் ஆஷ் தமிழிலும் டப்பாகி வந்துள்ளது. 3ம் பாகத்தை பார்க்கும் முன்பு முதல் இரண்டு பாகங்களை பார்ப்பது நல்லது. காரணம், கதை நன்றாக புரியும், பல கேரக்டர்கள் முந்தைய பாகத்தில் இப்படி வந்தார்களே என்பது நினைக்கும் போது கதையும் கனெக்ட் ஆக முடியும். குறிப்பாக, 2ம் பாகத்தின் நீளமாக, பல சம்பவங்களின் தொடர்ச்சியாக 3ம் பாகம் இருக்கிறது.
2ம் பாக கிளைமாக்சில் கடலில் நடக்கும் சண்டையில் எதிரிகளை துரத்தி அடித்துவிட்டு, கடல்வாழ் இனத்துடன் மனைவி சோயா, மகன், மகள்களுடன் வசிக்கிறார். நாவி இனமாக மாறிவிட்ட ஹீரோ சாம். அப்போது அவர்களுடன் இருக்கும் வில்லன் ஸ்டீபன்லாங் மகன் மைல்ஸ் மூலமாக பிரச்னை வருகிறது. மகனை மீட்க, சூனியக்காரி வாரங் டீமுடன் தேடுதல் வேட்டை நடத்துகிறார் ஸ்டீபன். அந்த கடல் பகுதியில் நடக்கும் கன்று திருவிழாவுக்காக ஏகப்பட்ட ராட்சத விலங்குகள் கூடுகின்றன. அதை கொன்று அதன் மூலமாக கோடிக்கணக்கில் பணம் அள்ள திட்டமிடுகிறது இன்னொரு வில்லன் டீம்.
இரண்டு வில்லன்கள், சூனியக்காரி வில்லி என முவரையும் ஹீரோ, ஹீரோயின், அவர்களின் ஆதரவாளர்கள் எப்படி சமாளிக்கிறார்கள். அப்போது நடக்கும் சண்டையில் யார் வெற்றி பெறுகிறார்கள். எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பது இந்த பாகம். பறக்கும் வணிக வியாபார கூட்டம், அதை தடுக்கும் கொள்ளை கும்பல், அப்போது நடக்கும் சண்டையில் இருந்து விறுவிறுப்பு தொடங்குகிறது. அடுத்து ஹீரோவை எதிரி கும்பல் கைது செய்து சிறை வைக்க, தனி ஆளாக அவரை மீட்கும் ஹீரோயின் சோயாவின் ஆக் ரோஷ சண்டை இன்னொரு பரபரப்பு.
கடைசியில் அனைத்து வில்லன்கள் பெரும்படையுடன் வர, கடல், மலையில் ஹீரோ உடன் நடக்கும் அரை மணி நேர கிளைமாக்ஸ் சண்டை, அது சான்சே இல்லை. அப்படியொரு விஷூவல் விருந்து. அந்த சண்டைக்காட்சிக்காகவே படத்தை பல தடவை பார்க்கலாம். கடல் வாழ் மக்கள் வசிக்கும் ஏரியா, ஒரு பேண்டசி விலங்கு உதவியால் பறக்கும் வணிகர் கூட்டம், மலை, கடல், வினோத விலங்குகள், பறவைகள், காடு என விஷூவல் எபக்ட், சிஜி காட்சிகளில் பெரும் விருந்து கொடுத்து இருக்கிறார் இயக்குனர். பாண்டோரா மக்கள், நாவிகள், அவர்களின் எதிரிகள், எதிர்கால மனிதர்கள், ரோபோ, பறக்கும் ராட்சத பறவைகள், திமிங்கலங்கள் போன்ற கடல்வாழ் உயிரினங்கள், ஆயுதங்கள், கடவுள் சக்தி என பல விஷயங்களில் மிரட்டி, புது வித சினிமாவை அனுவத்தையும் தந்து இருக்கிறார். ஹீரோ பாசம், ஹீரோயின் கோபம், வில்லனின் ஆக் ரோசம், வில்லியின் கொடூரம், குழந்தைகளின் ஆர்வம் என பல விஷயங்களையும் திரைக்கதையில் அழகாக காண்பிக்கிறார்.
மைல்ஸ் காமெடியும் பண்ணுகிறார். இப்படிப்பட்ட பேண்டசி, ஆக் ஷன் படத்தில் குடும்ப உறவு, பாசத்தை சொல்லும் காட்சிகள், மூதாதையர்கள், குல தெய்வ வழிபாடு போன்ற காட்சிகளையும் அழுத்தமாக சொன்ன இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும். படம் 3.17 நிமிடங்கள் ஓடுகிறது. கொஞ்சம் சென்டிமென்ட், டயலாக் காட்சிகள் அதிகம். சில கேரக்டர் பின்னணி புரியலை என்ற மைனஸ் இருந்தாலும், அவதார் 3 உலகத்தை பார்த்தால் ஆச்சரியங்கள், மெய் சிலிர்பு உருவாவது நிச்சயம். ஜேம்ஸ் கேமரூன் போன்றவர்களால் மட்டுமே இப்படிப்பட்ட பிரமாண்டங்களை, கற்பனைக்கும் எட்டாத கலைப்படைப்புகளை கொடுக்க முடியும் என்று எண்ண தோன்றும், அவதார் பயர் அண்ட் ஆஷ் படத்தை குடும்பம், குழந்தைகளுடன் பார்த்து ரசிக்கலாம்.
கொம்புசீவி:
பொன்ராம் இயக்கத்தில் மறைந்த விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன், சரத்குமார், தார்ணிகா, காளிவெங்கட் உட்பட பலர் நடித்த காமெடி படம். மாமா சரத்குமாரும், மருமகன் சண்முகபாண்டியனும் ஊருக்குள் ரவுசு செய்துவிட்டு, கஞ்சா வியாபாரம் செய்கிறார்கள். ஹீரோயின் தார்ணிகா போலீஸ் இன்ஸ்பெக்டர். வில்லன் சுஜித் சங்கர் போலீஸ் எஸ்.பி. இருவரும் அந்த வியாபாரத்தை ஒடுக்க நினைக்கிறார்கள். என்ன நடக்கிறது என்பது கதை. முதன் முறையாக பக்கா கிராமத்து இளைஞன் வேடத்தில், காமெடி கலந்து சிறப்பாகவே நடித்து இருக்கிறார் சண்முகபாண்டியன். அவரின் லவ், பைட் சீன் நன்றாக வந்து இருக்கிறது.
அவரும் சரத்குமாரும் சேர்ந்து அடிக்கிற லுாட்டி அமர்களம். அவருக்கான ஹீரோயிசம், காமெடி காட்சிகளில் வொர்க் பண்ணியிருந்தால் இன்னும் படம் சிறப்பாக வந்து இருக்கும். ஹீரோ பாடல் காட்சிகளிலும் நன்றாக ஆடுகிறார். என்ன, பல இடங்களில் அந்த காமெடி வொர்க் அவுட் ஆகவில்லை. ஹீரோயின் தார்ணிகா சில காட்சிகளில் இயல்பாக நடித்து இருக்கிறார். பெரும்பாலான சீன்களில் போலீஸ் உடையிலேயே இருக்கிறார். மாமாவாக சரத்குமார் 2வது ஹீரோ போல படம் முழுக்க வந்து அமர்களம் பண்ணுகிறார். ஊர்மக்கள், போலீஸ், வில்லன்களிடையே அவர் செய்யும் விஷயங்கள் ரசிக்க முடிகிறது.
சில இடங்களில் அதுவும் செட் ஆகவில்லை. யுவனின் பாடல் காட்சி ஓகே. பின்னணி இசை சுமாராக உள்ளது. கிளைமாக்ஸ், விவசாயம் சம்பந்தப்பட்ட சீன்களின் அழுத்தம் இல்லை. வில்லன்கள், ஆந்திர போர்ஷனில் விறுவிறுப்பு குறைவு. திரைக்கதையில், காமெடியில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். பொன்ராமின் வருத்தப்படாதவாலிபர் சங்கம், ரஜினிமுருகன் படங்களில் காமெடி தெறிக்கும், பாடல்கள் சூப்பராக இருக்கும். இதில் அந்த மாஜிக் மிஸ் சிங்.
சிறப்பு செய்தியாளர் : மீனாட்சிசுந்தரம்












