அவசரகால பயன்பாட்டிற்கு கோவோவேக்ஸ் தடுப்பூசியை பயன்படுத்திக் கொள்ள உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வந்தன. இதில் பல தடுப்பூசிகளை உலக சுகாதார அமைப்பு, அவசரகாலப் பயன்பாடுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதுவரை 9 கொரோனா தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்காவைச் சோ்ந்த நோவாவேக்ஸ் என்ற நிறுவனம் கோவோவேக்ஸ் கொரோனா தடுப்பூசியைத் தயாரிக்கிறது. இந்தத் தடுப்பூசியை அதிக எண்ணிக்கையில் தயாரித்து, ஏழை நாடுகளுக்கு விநியோகிக்க, இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் நோவாவேக்ஸ் கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்தது.
கோவோவேக்ஸ் தடுப்பூசியை சீரம் நிறுவனம் உற்பத்தி செய்ய இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டிசிஜிஐ) கடந்த மே மாதம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில், இந்தத் தடுப்பூசியை அவசரகாலப் பயன்பாட்டுக்கு பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு வெள்ளிக்கிழமை அனுமதி அளித்துள்ளது. இதுபற்றி சீரம் நிறுவனத் தலைவா் அதாா் பூனாவாலா, சமூகவலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ’’கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் புதிய மைல்கல்லை எட்டியிருக்கி றோம். கோவோவேக்ஸ் தடுப்பூசியின் அவசரகாலப் பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.








