நெல்லை சம்பவத்தைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிக்கட்டிடங்களை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
நெல்லையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலை பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். நேற்று காலை 11 மணி அளவில், இடைவேளையின் போது மாணவர்கள் கழிவறைக்கு சென்ற நிலையில், சுற்றுச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே 8ம் வகுப்பு மாணவர் விஸ்வரஞ்சன் மற்றும் 9ம் வகுப்பு மாணவர் அன்பழகன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மற்றொரு மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காயமடைந்த மேலும் 2 மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதனிடையே, மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிக் கட்டடங்களை ஆய்வு செய்ய குழு அமைத்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாவட்ட வாரியாக அமைக்கப் பட்டுள்ள குழுக்களுக்கு, 19 கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உறுதித்தன்மை இல்லாத பள்ளி கட்டடங்களை கண்டறிந்து உடனடியாக இடிக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், நெல்லையில் பள்ளி இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகவும் இனி இதுபோன்ற துயர சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கப் படும் எனவும் கூறினார். இச்சம்பவம் குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர் மட்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.








