உதகை அருகே மரக்கூண்டில் வைக்கப்பட்டுள்ள ரிவால்டோ யானையின் உடல்நிலை குறித்து ஆராய வனத்துறை சார்பில் 8 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்க்கப்பட்டுள்ளது.
உதகை அருகே உள்ள வாழைத்தோட்டம் மற்றும் மாவனல்லா பகுதியில் 45 வயது மதிக்கதக்க ரிவால்டோ என்ற காட்டு யானை சுற்றி திரிந்து வந்தது. தும்பிக்கையில் ஏற்பட்ட காயம் மற்றும் கண் பார்வை குறைவு காரணமாக வனபகுதிக்குள் செல்லாமல் அந்த யானை அதிக நேரம் குடியிருப்பு பகுதிக்குள்ளேயே நடமாடியதுடன், விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதபடுத்தியும் வந்தது.
இதனையடுத்து அந்த யானையை பிடிக்குமாறு அப்பகுதி மக்கள் முதுமலை புலிகள் காப்பக நிர்வாகத்திற்கு கோரிக்கைவிடுத்து வந்தனர். குறிப்பாக ஆதிவாசி மக்களின் கோரிக்கையை அடுத்து ரிவால்டோ யானை வாழைத்தோட்டம் பகுதியில் அமைக்கபட்ட கிராலில் அடைக்கபட்டுள்ளது. 50 நாட்களுக்கு மேலாக அந்த யானைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
இதனையடுத்து ரிவால்டோ யானையின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்யவும் வன பகுதியில் விடுவதா அல்லது முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு அழைத்து சென்று பராமரிப்பதா என்பது குறித்து முடிவு செய்ய 8 பேர் கொண்ட வல்லுனர் குழு ஒன்று தமிழக வனத்துறை சார்பாக அமைக்கபட்டுள்ளது.
முன்னாள் தமிழக வன கால்நடை உதவி இயக்குனர் மனோகரன் தலைமையில் அமைக்கபட்டுள்ள இந்த குழுவில் நீலகிரி மாவட்ட கால்நடைபராமரிப்பு துறை துணை இயக்குனர், சுற்றுசூழல் ஆர்வலர்கள், யானை நிபுணர்கள், வன உயிரியல் துறை பேராசிரியர் உள்ளிட்ட 8 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு விரைவில் வாழைத்தோட்டம் பகுதியில் ஆய்வு செய்வதுடன் ரிவால்டோ யானையையும் பார்வையிட்டு அறிக்கையை தமிழக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு அளிக்க உள்ளது.







