வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 45 நிமிடங்கள் ஆய்வு மேற்கொண்டார்.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் தொற்று உறுதியான நிலையில், கடந்த 3 ஆம் தேதி நீலா என்ற 9 வயது சிங்கம் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தது. தொற்று உறுதி செய்யப்பட்ட 8 சிங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் மருத்துவக் குழு கண்காணிப்பில் இருந்து வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதில் இரண்டு சிங்கங்களின் உடல் நிலை, வயது மூப்பின் காரணமாக மோசமாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப் பட்டது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்கு முன்பு உயிரியல் பூங்கா அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட அவர், சிங்கங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை தொடர்பாகவும் மற்ற விலங்குகளுக்கு தொற்றுப் பரவாமல் இருக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனையில் ஈடுபட்டார்.
பின்னர் உயிரியல் பூங்கா பேட்டரி வாகனம் மூலமாக உள்ளே சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வனத்துறை அதிகாரிகள், மருத்துவ குழுவினருடன் 45 நிமிடங்கள் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் அன்பரசன், தமிழக வனத்துறை தலைமை அதிகாரி யுவராஜ், மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் மற்றும் முக்கிய அதிகாரிகள் உடன் இருந்தனர்.