காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு, விவசாயி குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் 50ஆயிரம் நிதியுதவி.
ஓசூர் அருகே தளி வனச்சரகத்திற்குட்பட்ட உளிபெண்டா கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி குண்டப்பா (63). இவர் நேற்று இரவு கிராமத்தின் அருகேயுள்ள தனது விவசாய தோட்டத்திற்கு காவலுக்கு சென்றுள்ளார். அப்போது தக்காளி தோட்டம் ஒன்றில் நின்றிருந்த ஒற்றை காட்டுயானை விவசாயி குண்டப்பாவை விரட்டி கடுமையாக தாக்கியுள்ளது.
இதில் உடலில் பலத்த காயங்கள் அடைந்த அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.காலையில் அந்த பகுதிக்கு சென்ற பொதுமக்கள் குண்டப்பா உயிரிழந்த கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து தளி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற தளி வனத்துறையினர் மற்றும் தளி காவல்துறையினர் விவசாயி இறப்பு குறித்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து அவரது உடலை பிரதே பரிசோதனைக்காக தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த குண்டப்பா குடும்பத்தினருக்கு வனத்துறை சார்பில் முதல்கட்ட நிவாரண நிதியாக 50 ஆயிரத்துக்கான காசோலையை வனத்துறை சார்பில் வழங்கப்பட்டது.







