“கல்வியில் சிறந்த தமிழ்நாடு” எனப் போலி பிம்பச் சுவரை எழுப்பும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்….!

திமுக அரசானது, பள்ளிச் சுவர்களை இடியவிட்டு “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” எனப் போலி பிம்பச் சுவரை எழுப்புவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

“பள்ளிச் சுவர்களை இடியவிட்டு “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” எனப் போலி பிம்பச் சுவரை எழுப்பும் திமுக அரசு. கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளியின் கைப்பிடிச் சுவர் இடிந்து விழுந்து 7 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் உயிரிழந்த துயரத்தில் இருந்தே தமிழகம் இன்னும் மீண்டு வராத நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 100 அரசுப் பள்ளிகளின் சுற்றுச்சுவர்கள் முற்றிலுமாக சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

கோடிக் கணக்கில் பணத்தைக் கொட்டி விளம்பர விழா நடத்த நிதியிருக்கும் திமுக அரசுக்கு பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மனமில்லை என்பதற்கான மற்றொரு சான்று இது. எளிய பின்புலம் கொண்ட பிள்ளைகளின் புகலிடமாகத் திகழும் அரசுப் பள்ளிகளை எதற்கு இத்தனை அலட்சியத்துடன் ஆளும் அரசு கையாள்கிறது என்று புரியவில்லை.

அரசுப் பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லாததால் பிள்ளைகள் ஊற்று தோண்டி தண்ணீர் குடிப்பதையும், கழிவறை இல்லாததால் இயற்கை உபாதை கழிக்க பிள்ளைகள் திறந்தவெளிகளை நாடுவதையும், சத்துணவில் புழு, பூச்சி, பல்லிகள் மிதப்பதையும், புதிய கட்டடங்களின் மேற்கூரை பெயர்ந்து விழுவதையும் கண்டு நமக்கு தான் நெஞ்சம் பதறுகிறதே தவிர, ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருப்பவர்கள் அமைதியாக வேடிக்கை தான் பார்க்கிறார்கள். “அரசுப்பள்ளிகள் எனது கோட்டை” என்று பஞ்ச் வசனம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அமைதியாகப் பதுங்கிவிட்டார், “நான் உங்கள் அப்பா” என சென்டிமென்ட் வசனம் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் விளம்பர ஃபோட்டோஷூட்களில் பிஸியாகிவிட்டார்.

இவர்களை நம்பி வாக்களித்த மக்கள் தங்கள் குடும்பத்துடன் நிற்கதியற்று நிற்கிறார்கள். அதுசரி, மக்கள் நலனைப் பேணுவதற்கா திமுக ஆட்சிக்கு வந்தது? கொள்ளையடிப்பவர்களிடம் கொத்து சாவியைக் கொடுத்தது தமிழகத்தின் மிகப்பெரிய வரலாற்றுப் பிழை’ என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.