கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையான இரண்டாயிரம் ரூபாய், வரும் 10 ஆம் தேதி முதல் அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சராக நேற்று பதவியேற்ற மு.க.ஸ்டாலின், கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்குவது, நகரப்பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிப்பது என்பது உள்ளிட்ட ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார். கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையாக ரூ.2000 இந்த மாதமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், ரூ.2000 கொரோனா நிவாரணம் வழங்கும் திட்டத்தை வரும் திங்கட் கிழமை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை இன்று சந்தித்த அவர், கொரோனா நிவாரண நிதியாக, முதல் தவணையான ரூ.2000 திங்கட்கிழமை முதல் வழங்கப்படும். நியாய விலை கடை களில் காலை 8 மணி முதல் 12 மணி வரை வழங்கப்படும். தினமும் 200 பேர் வீதம் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் இந்தத் தொகை வழங்கப்படும். இதற்கான டோக்கன் மாவட்டம் தோறும் வீடுவீடாக சென்று வழங்கப்பட இருக்கிறது. மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நிவாரண நிதி வழங்கப்படுவதை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.







