இரட்டை இலை சின்னத்தை, குக்கர் சின்னத்தை வைத்து தான் மீட்டெடுக்க முடியும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மதுரை பெத்தானியாபுரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொடியினை
அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஏற்றி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய டிடிவி தினகரன், “அமமுக ஆட்சி அதிகாரத்துக்காக உருவாக்கப்பட்ட கட்சி அல்ல. 2017 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் விசுவாசிகளுக்கு துரோகம் செய்தபோது அமமுக தொடங்கப்பட்டது. எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும், அமமுக தொடர்ந்து செயல்படும். இரட்டை இலை சின்னத்தை, குக்கர் சின்னத்தை வைத்து தான் மீட்டெடுக்க முடியும். அமமுகவை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. 2026 ஆம் ஆண்டு உண்மையான ஜெயலலிதாவின் வாரிசுகள் ஒன்று சேர்வோம்” என்று தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :
“டிடிவி, ஓபிஎஸ் இணைந்ததற்கு எடப்பாடி பழனிச்சாமி பதறுகிறார். ஓபிஎஸும் நானும் நீண்ட கால நண்பர்கள். விதியின் சதியால், சிலரின் தவறான தூண்டுதலால் பிரிந்து இருந்தோம். ஓபிஎஸ்-ம் நானும் மீண்டும் இணைந்து உள்ளோம். ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்தவர்களை வீழ்த்தாமல் ஓயமாட்டோம். பண மூட்டையுடன் உள்ளவர்களை வீழ்த்தி அதிமுகவை மீட்டு தொண்டர்களின் கைகளில் ஒப்படைப்போம். அதிமுக சுயநலவாதிகள் கையில் சிக்கி உள்ளது. அதிமுகவை மீட்கும் பொறுப்பு எனக்கும், ஓபிஎஸ்-க்கும் உண்டு.
திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் 60 மாதங்களில் வரவேண்டிய கெட்ட பெயர், 24 மாதங்களில் வந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக்கு எதிராகவும், திமுக திருந்தி இருக்கும் என்று நினைத்தும் மக்கள் வாக்களித்தனர். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின்போது எடப்பாடி பழனிசாமி தார்மீக பொறுப்பு ஏற்று பதவி விலகி இருந்தால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று கேட்கும் தகுதி பழனிசாமிக்கு இருந்திருக்கும். தமிழகத்தில் கள்ளச்சாராயம், போதை கலாச்சாரத்தை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
அதிமுக வழக்குகளில் தற்போது பழனிசாமி வேண்டுமானால் வெற்றி பெறலாம். ஆனால் இறுதியில் ஓபிஎஸ் வெற்றி பெற்று அதிமுகவை மீட்டெடுப்பார். ஜெயலலிதா மறைவிற்கு பின் ஓபிஎஸ் முதல்வராக இருந்தபோது, சசிகலா முதல்வர் ஆக வேண்டும் என அனைவரும் விருப்பப்பட்டார்கள். அதனால் ஓபிஎஸ்-ஐ ராஜினாமா செய்ய சொன்னோம். எனது வேண்டுகோளை ஏற்றே ஓபிஎஸ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். நாங்கள் இருவரும் சுயநலத்தால் இணையவில்லை. அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்பதால் இணைந்துள்ளோம், தற்போது நானும் ஓபிஎஸ்-ம், சிபிஎம் – சிபிஐ போல செயல்படுவோம். அதிமுகவை மீட்டெடுத்த பின் ஒன்றினைந்து செயல்படுவோம்”.
இவ்வாறு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.







