சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணித்த நிலையில், ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 21-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, கலந்துகொண்டு முதுமுனைவர் பட்டம் பெறும் 4 பேருக்கும், முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்த 505 மாணவர்களுக்கும், முதுகலையில் முதலிடம் பிடித்த 99 பேருக்கும் தங்கப் பதக்கத்துடன் பட்டம் வழங்கினார்.
இந்த பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார். முன்னதாக ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக, திராவிடர் கழகம், விசிக உள்ளிட்ட கட்சியினர் கல்லூரி அருகே கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே பட்டமளிப்பு விழாவில் இருந்து சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள் மற்றும் மேட்டூர் பாமக எம்எல்ஏ சதாசிவம் ஆகியோர் வெளிநடப்பு செய்ததால் சலசலப்பு ஏற்பட்டது. விழாவில் ஆளுநருக்கு பொன்னாடை போர்த்த அனுமதி அளிக்காததால் அவர்கள் இருவரும் வெளிநடப்பு செய்ததாக கூறப்படுகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா








