வாரன்டி பறிபோன காங்கிரஸ், மக்களுக்கு கேரன்டி கொடுக்கமுடியுமா? – பிரதமர் நரேந்திர மோடி

காங்கிரஸ் என்றாலே ஊழல், பொய் வாக்குறுதி அளிக்கும் கட்சி என்று தான் அர்த்தம் என கர்நாடக பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.  கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல்…

காங்கிரஸ் என்றாலே ஊழல், பொய் வாக்குறுதி அளிக்கும் கட்சி என்று தான் அர்த்தம் என கர்நாடக பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து ஆளும் கட்சியான பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் உள்ளது. பாஜக சார்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) உள்ளிட்ட கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் இன்று கர்நாடாக பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடினார். அப்போது பேசிய அவர், கர்நாடகா மக்கள் பாஜக மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அம்மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர்களுக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு அளித்து, மிகுந்த பாசத்துடன் நடந்து கொண்டனர் என்றார்.

நீங்கள் பொதுமக்களிடம் சென்று இரட்டை எஞ்சின் அரசின் முக்கியத்துவம் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து விரிவாக கூறவேண்டும். மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் விரிவான விளக்க வேண்டும். ஒரு வீட்டில் குறைந்தது ஒரு மணி நேரம் செலவிட்டு மத்திய அரசின் மக்கள் நல திட்டங்கள் குறித்து பேச வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், கர்நாடகாவில் விரைவில் பிரசாரம் செய்ய வருகிறேன். கர்நாடகாவில் பாஜக வரலாற்று வெற்றியைப் பெறும். கர்நாடகாவில் பாஜக பெரும்பான்மை பலம் பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும். கர்நாடகாவுக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

நான் ஒரு காரியகர்த்தாவாக கர்நாடகாவுக்குச் சென்றபோது, மக்கள் என் மீது அன்பையும் ஆசீர்வாதத்தையும் பொழிந்தனர். கர்நாடகாவின் வளர்ச்சிக்கு பங்களித்த பலர் உள்ளனர். மன் கி பாத்தில் கர்நாடக மக்களின் பங்களிப்பைப் பற்றி நான் நிறைய பேசியிருக்கிறேன். இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவார்களா என மக்கள் காத்திருக்கின்றனர். இதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறது தற்போது வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் என்றாலே ஊழல், பொய் வாக்குறுதி என்றுதான் அர்த்தம் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.