சூலூர் அருகே இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பும் நிவாரணமும் வழங்கப்படும் எனத் தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், சூலூர் போகம்பட்டி அருகேயுள்ள பொன்னாங்காணி கிராமத்தில் கடந்த மாதம் சாலையில் சென்று கொண்டிருந்த முதியவர் மீது பட்டியலினத்தைச் சேர்ந்த ராமு என்பவர் மோதியதில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. நடந்த மோதலில் பலத்த காயமடைந்த ராமு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவத்தில் தொடர்புடைய 12 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். இதுகுறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை நோட்டீஸ் வழங்கியதன் அடிப்படையில் தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் அருண் ஹல்டர், சூலூர் போகம்பட்டியை அடுத்த பொன்னாங்காணி கிராமத்தில் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பாதிக்கப்பட்ட ராமுவின் மனைவியிடம் விசாரணை மேற்கொண்ட அவர் காவல்துறை நடவடிக்கைகள் குறித்தும், பாதிக்கப்பட்டவர்களின் தேவைகள் மற்றும் அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரு பிரிவினரிடையே பழிவாங்கும் போக்கு ஏற்படாமல் இருக்க விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டும் எனக் காவல்துறையினரிடம் தெரிவித்ததாகக் கூறினார். இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பும் நிவாரணமும் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் இந்த ஆய்வின்போது ஐஜி, டிஐஜி, மாவட்ட எஸ்பி, மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.









