முக்கியச் செய்திகள்

சமத்துவப் போராளி ரெட்டைமலை சீனிவாசன்

ஒரு நதியின் ஓட்டம் தடுக்கப்படும் போது, அது ஓங்கி சத்தம் எழுப்பும். தடுக்க வரும் அனைத்தையும் முட்டி உடைக்க முயலும். அப்படி, சாதிய அடக்குமுறைக்கு எதிராக வெகுண்டு எழுந்தவர் ரெட்டைமலை சீனிவாசன். எந்தப் பெயரால் இழிவுபடுத்தினார்களோ, அந்த பெயரை கொண்டே முன்னேறிக் காட்ட வேண்டும் என்று, ‘பறையன்’ இதழை தொடங்கி, தாழ்த்தப்பட்ட மக்களின் வலியை பதிவு செய்தவர்.

பிரிட்டிஷ் ஆட்சியில், அன்றைய செங்கல்பட்டு மாவட்டம் கோழியாளத்தில், 1859 ஜூலை 7ஆம் தேதி, ரெட்டைமலை – ஆதிஅம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார் சீனிவாசன். தஞ்சைக்கு இடம்பெயர்ந்த பிறகு, திண்ணைப் பள்ளியில் தொடக்கக் கல்வியைக் கற்றவர், கோவை அரசுக் கல்லூரியில் இளங்கலை முடித்து, பட்டப்படிப்பை முடித்த முதல் பட்டியலின பட்டதாரியாக வரலாற்றில் தடம் பிடித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

தமது சகோதரியின் கணவரும், சாதி எதிர்ப்புப் போராளியுமான அயோத்திதாச பண்டிதருடன் இணைந்து, திராவிட மகாஜன சபை, பறையர் மகாஜன சபை என பல்வேறு தளங்களில் பயணித்தார். கல்வியே சமூக விடுதலை தரும் என்ற அம்பேத்கரை முன்மொழிந்து, கல்வியே பட்டியலின மக்களுக்கு விடுதலையை கொடுக்கும் என நம்பினார்.

லண்டன் வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்று குரலெழுப்பியவர், பட்டியலின மக்களுக்கு இரட்டை வாக்குரிமையை எதிர்த்து எரவாடா சிறையில் காந்தி உண்ணாவிரதம் இருந்தபோது, அம்பேத்கருடன் சென்று அவரை சந்தித்தார். காந்தி – அம்பேத்கர் இடையே கையெழுத்தான பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் ரெட்டைமலை சீனிவாசன்.

 

20 ஆண்டுகள் தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராக பணியாற்றியவர், சொந்த ஊர் திரும்பியதும், சென்னை மாகாண சபை நியமன உறுப்பினராக்கப்பட்டார். இவர் காலத்தில் தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காகப் பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. விடுமுறை தினங்களில் மதுக்கடை மூடல், பரம்பரை மணியக்காரர் முறை, ஆலய நுழைவு, தொழுவத்தில் குற்றவாளிகள் கட்டும் முறை ஒழிப்பு, படிப்பறிவில்லாதவர்களிடம் கைரேகைகள் பெறும் முறையில் மாற்றம், போன்ற சமூக சீர்த்திருத்தச் சட்டங்களின் பின்னால் இவர் இருந்தார்.

தமிழ்நாடு என பெயர் சூட்டப்படுவதற்கு முன்பே தமிழ்நாடு தமிழருக்கே என முழங்கியவர் சீனிவாசன். இவரது சேவையை பாராட்டி பிரிட்டிஷ் அரசு, ‘திவான் பகதூர்’, ‘ராவ் பகதூர்’ ஆகிய பட்டங்களை அளித்தது. ‘திராவிட மணி’ என பெயர்சூட்டி மகிழ்ந்தார் திரு.வி.க. உடல்நலக்குறைவால் 1945ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் நாள் உயிரிழந்தார் ரெட்டைமலை சீனிவாசன்.

 

கட்டுரையாளர்: வரலாறு சுரேஷ்

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

த்ரில்லர் ஸ்பெஷலிஸ்ட் அருள்நிதி

G SaravanaKumar

பள்ளி, கல்லூரி நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க பெற்றோர்கள் கோரிக்கை

EZHILARASAN D

தக்காளி விலை உயர்வு; வித்தியாசமான ஆஃபரை வெளியிட்ட பிரியாணி கடை

G SaravanaKumar