மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு – முதலமைச்சர் விஜய் பங்கேற்பு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் 31-வது தென்னக மண்டலக் குழு முதலமைச்சர்களுக்கான மாநாடு நடைபெற உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் 31-வது தென்னக மண்டலக் குழு முதல்வர்களுக்கான மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு நாளை காலை 10 மணிக்குத் தொடங்குகிறது. இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு தனி விமானம் மூலம் சென்னை வருகை தந்து, மாநாடு நடைபெறும் விடுதியில் தங்குவதோடு, முதல்வர்களுடனான இரவு விருந்திலும் கலந்துகொள்கிறார். 

இந்த மாநாட்டில் மாநிலங்களுக்கான நிதிப் பங்கீடு மற்றும் மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய உரிமைகள் தொடர்பான விவகாரங்கள், மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு குறித்த தென்மாநிலங்களின் அச்சங்கள் மற்றும் அது சார்ந்த நிலைப்பாடுகள், மாநிலங்களுக்கு இடையேயான நிலுவையில் உள்ள நதிநீர்த் தகராறுகள் மற்றும் மேலாண்மைப் பிரச்சினைகள், தென் மாநிலங்களின் நீண்ட கடற்கரைப் பகுதிகளின் பாதுகாப்பு, உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தமுக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

​தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய தென்மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்த மாநாடு, மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், மத்திய அரரிடம் கோரிக்கைகளை முன்வைக்கவும் ஒரு முக்கிய தளமாக அமைகிறது.

இந்த விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், ஆந்திர ​முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா ​முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடகா ​முதலமைச்சர் சிவகுமார், கேரளா ​முதலமைச்சர் சதீசன், புதுச்சேரி ​முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.