சென்னை அண்ணா அறிவாலையத்தில் குடி அரசு இதழ் முழுதொகுப்பு வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நூலை வெளியிட்டார்.
பின்னர் இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “இத்தனை ஆண்டுகாலம் நாம் பாடுபட்டு உருவாக்கிய வளர்ச்சி எல்லாம், ஆறே மாதத்தில் பின்னோக்கி போய்கொண்டிருக்கிறது என்பதுதான் மிகவும் வருத்தமாக உள்ளது. இதில் கொடுமை என்னவென்றால், ஆளுங்கட்சியும் பெரியாரை கொள்கை தலைவர் என்று கூறுவதுதான். தவெகவிற்கு கொள்கை தலைவராகவும் வழிகாட்டியாகவும் ஒரு ஜோசியர் தான் இருக்கிறார். மூட நம்பிக்கையில் ஊறிப்போன தவெகவினர், தங்களின் கொள்கை தலைவராக பெரியாரையும், அம்பேத்கரையும் சொல்லிக்கொண்டு, அவர்களின் கொள்கைக்கு எதிராக செயல்படுகிறார்கள்
ஒரு விஷயத்தில் கூட இந்த ஆட்சியாளர்களால் உறுதியாக இருக்க முடியவில்லை. அறிவிக்கிறார்கள், ரத்து செய்கிறார்கள். எல்லாவற்றிலும் U-Turn தான். வெளிப்படைத்தன்மை இல்லை. இவர்களே ஒரு செய்தியை கசிய விடுகிறார்கள், எதிர்ப்பு கிளம்பினால், உண்மை இல்லை என்று மறுக்கிறார்கள்.
தொழில்துறைக்கு வழிகாட்ட வேண்டிய GUIDANCE TN என்ற அமைப்பு கூட, இன்றைக்கு வழி தெரியாமல் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. இவர்களால் பக்கத்து மாநிலம் எல்லாம் நம்மை Comedian ஆக பார்த்துக்கொண்டிருக்கிறது. எந்த துறையை எடுத்துக்கொண்டாலும், தமிழ்நாடு பின்னோக்கி தான் சென்று கொண்டிருக்கிறது.
இந்த ஆட்சியில் மின்வெட்டுக்கும், அரிவாள் வெட்டுக்கும் நடுவுலதான் போட்டி என்று முன்பு சொன்னேன். அது இப்போது Upgrade ஆகி, போதைப்பொருளுக்கும், வன்கொடுமைகளுக்கு நடுவுலதான் போட்டி என்ற சூழல் உருவாகியுள்ளது. அதே போல் அதிகாரிகளுக்கு யார் தொல்லை கொடுப்பது என்று அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏ-க்களுக்கும் நடுவில் போட்டி உருவாகியுள்ளது. அடுத்து என்ன வரும் என்று தெரியவில்லை.
பெண்கள் சுதந்திரமாக நடமாடவில்லை. இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவில் போ* பொருட்கள் தமிழ்நாட்டில் பிடிபடுகிறது. அதனை பிடிப்பதும் மாநில காவல்துறை அல்ல; ஒன்றிய அரசின் துறைகள். குட்கா மாஜிக்களையும், மெத் பூபாலனையும் கட்சியில் வைத்துக்கொண்டிருந்தால், இவர்களால் எப்படி போ* பொருளை கட்டுப்படுத்த முடியும்?
வெங்காயம், தக்காளியை கூட வாங்க முடியாத நிலையில் உள்ளது தமிழ்நாடு. சாப்பிடாமல் இருந்தால் தான் மயக்கம் வரும் என்றால், இன்றைக்கு அரிசி விலையை கேட்டாலே மயக்கம் வருகிறது. இதை பற்றி முதலமைச்சர் விஜய் வாயை திறக்கிறாரா என்றால், அதுவும் இல்லை. ஆறே மாசம், எல்லாமே நாசம் என்று சொல்லும் அளவிற்கு இந்த ஆட்சி இருக்கிறது.
தவெக என்ற கட்சி அரசியல் பிணி மட்டுமல்ல; அது ஒரு சமூக பிணி. அதை எதிர்த்து நாங்கள் போராடுவது போல், அனைவரும் மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
கல்விக்கான அடித்தளத்தை அமைத்து தந்தது தந்தை பெரியார்தான். அதனால் தான் ஆனந்த விகடன் அன்று, ‘காரியம் காமராஜர், ஆனால் காரணம் தந்தை பெரியார்’ என்று குறிப்பிட்டு இருந்தது. தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கான கட்டமைப்பை உருவாக்கியது காமராஜர் என்றால், உயர்கல்விக்கான கட்டமைப்பை உருவாக்கியது முத்துவேலர் கருணாநிதி அவர்கள். பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் என உருவாக்கியவர் கலைஞர் அவர்கள்.” இவ்வாறு அவர் பேசினார்.




