திருச்சி அருகே கார் விபத்தில் 8 பேர் உயிரிழப்பு – முதலமைச்சர் விஜய் இரங்கல்!

திருச்சி அருகே முசிறி தேசிய நெடுங்சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் துறையூர் – முசிறி நெடுஞ்சாலையில் இன்று மாலை கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இது வரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் விஜய் இர்ங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் – முசிறி நெடுஞ்சாலையில் கொத்தூர்பட்டி நால்ரோடு அருகில் இன்று (22.11.2026) மாலை கார் மரத்தில் மோதிய விபத்தில், அக்காரில் பயணம் செய்த தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி, மகாராஜபுரத்தைச் சேர்ந்த திரு.ஆ.சக்திவேல் (வயது 45) உள்ளிட்ட ஐந்து நபர்கள் நிகழ்விடத்திலேயும், படுகாயங்களுடன் முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மூன்று நபர்களும் என மொத்தம் எட்டு நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு நபர்களுக்கு உயரிய சிகிச்சை வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.