“மாணவர்களின் எதிர்காலத்திற்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” – மாணிக்கம் தாகூர்!

மாணவர்களின் எதிர்காலத்திற்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “இந்திய மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் வகையில் தொடரும் வினாத்தாள் கசிவுகள் குறித்து பதில் சொல்ல வேண்டிய மத்திய அரசு, தங்களது உரிமைக்காக டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை வன்முறைக்கும் பொறுப்பேற்க வேண்டும்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்திற்கு நேரடியாக பதிலளிக்க வேண்டிய நிலையில், பல நாட்கள் அவையைத் தவிர்த்து, இறுதி நாளிலும் மாணவர்களின் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கவில்லை.
கேள்விகளில் இருந்து ஓடலாம்;
ஆனால் பொறுப்பிலிருந்து ஓட முடியாது.

இன்று சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் நாங்கள் தெளிவாகச் சொல்வோம்:

வினாத்தாள் கசிவுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!

மாணவர்கள் மீதான வன்முறைக்கு பதில் சொல்லுங்கள்!

தமிழ்நாட்டின் குரலை நசுக்கும் தொகுதி மறுவரையறையை கைவிடுங்கள்!

நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் எந்த முயற்சியையும் தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது.

தமிழ்நாட்டின் உரிமைக்காக
மாணவர்களின் எதிர்காலத்திற்காக
நாங்கள் தொடர்ந்து போராடுவோம்!

சென்னை, எழும்பூர் – ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இன்று, 19.08.2026 | மாலை 5.00 மணி

வாருங்கள்! ஒன்றுபடுவோம்!
தமிழ்நாட்டின் உரிமைக்காக குரல் கொடுப்போம்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.