வட மாநில தொழிலாளர்களுக்கு இரண்டு மாதமாக சம்பளம் தராமல் தொழிற்சாலைக்குள் பூட்டி வைத்துள்ளதாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நெமிலி அடுத்த பானாவரம் அருகே மேல்வீராணம் பகுதியில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான இரும்பு கம்பி தயாரிக்கும் தொழிற்சாலையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு இரண்டு மாதமாக மாத
ஊதியம் வழங்கப்படவில்லை எனவும்,இது குறித்து தொழிற்சாலை நிர்வாகத்திடம் ஊதியம் கேட்டால் வெளி ஆட்களை கொண்டு மிரட்டுவதாக ஊழியர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் வட மாநிலத் தொழிலாளர்களில் ஐந்து நபர்கள் நேற்று மாலை காய்கறி
வாங்க வெளியே சென்றிருந்தபோது, மீதமுள்ள 25 தொழிலாளர்களை தொழிற்சாலையில் உள்ளே அடைத்து பூட்டி வைத்துள்ளதாகவும்,மேலும் வெளியே சென்ற தங்களையும் உள்ளே அனுமதிக்காமலும் மிரட்டுவதாக ஐந்து தொழிலாளர்களும் தெரிவித்தனர்.
இந்த தொழிலாளர்களைப் பணிக்கு அழைத்து வந்த கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த நரசிம்மகவுடா என்பவருக்கு சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் அவர் பானாவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அதில் அவர் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய இரண்டு மாத ஊதியத்தை முறையாக எங்களுக்கு பெற்றுத் தந்து, அடைத்து வைத்துள்ள தொழிலாளர்களை பத்திரமாக மீட்டுத் தருமாறும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாணாவரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்வட மாநிலத் தொழிலாளர்களை பத்திரமாக மீட்டு அவர்களுக்கு வழங்க வேண்டிய
மாத ஊதியத் தொகையை பெற்று தந்து அவர்களை பாதுகாப்பாக அவரவர் இருப்பிடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்தினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
– யாழன்







